| | அரிக்கு மவர்தமைக் காண்பது வேட்டரி வாட்டடங்கண் | | | தரிக்கு மவருழை யேயெனை நீத்துத் தனியுளமும் | | | பரிக்கு மவர்கைத் தழைக்கென தோள்களும் பாரிக்குநா | | | விரிக்கு மவர்க்கிசை யாமையென் னாவது மேதினிக்கே. |
(இ - ள்.) தோழியே அவரைக் காண்டலை விழைந்து செவ்வரி கருவரி பரந்த ஒளிபொருந்திய கண்கள் வருத்தாநிற்கும். (சேறும் நீரும்போன்று பிரியாதிருந்த) ஒப்பற்ற எனதுள்ளமும் என்னினீங்கி அவரிடத்தே தங்காநிற்கும். அவர்கையின்கட் டங்கும் தழையினுக்கு என்தோள்களும் பாரியாநிற்கும். இப்பூமியினிடத்து (அவர்புகழை) என் நாவானது விரித்துரையாநிற்கும். ஆதலால் அவர்க்குடன்படாமையால் ஆவது ஒருபயனு மின்றென்றாளென்க. (வி - ம்.) அரிக்கும் - வருத்தும். தரிக்கும் - தங்கும். பரிக்கும் - தங்கும். பாரிக்கும் - பெருத்தல்செய்யும். கண் காணுகை வேட்டு வருத்தும். உளமும் எனை நீத்து அவருழைத் தங்கும். அவர்கையின் கண்ணுள்ள தழைக்கு என தோள்கள் பூரிக்கும். நாஅவர் புகழை விரிக்குமாதலால் இசையாமல் என்செய்வ தென்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல். (361) மணந்த தலைவன் மகிழ்ச்சியில் கிளத்தல் அஃதாவது மறுத்தெதிர் கோடலை மேற்கொண்ட தலைவியை மணந்த தலைவன் கரைகோலித்தடுத்தலான் நிலைபெற்ற பெரும்புனல் அக்கரை யுடைந்த காலத்து வழிப்படச் சேறல்போல அன்பினாற் றலைவியின் மனமானது விரைந்து செல்லவும் அத்தலைவி பொறுமையுடன் அதன்பின்னே வந்து ஒல்கி அச்சோலை அழகா னிறைபட நின்ற நிலைமையை நெஞ்சமே மறவாதிருப்பாயாகவெனக் கூறாநிற்றல். | | சிறைபட நின்ற பெரும்புன லச்சிறை சிந்துதலும் | | | துறைபடச் செல்வது போலன்பி னுள்ளந் துனையவுந்தான் | | | பொறைபட வந்து பொலங்கொம்பி னொல்கிப் பொழிலழகு | | | நிறைபட நின்ற நிலையய ராதியென் நெஞ்சகமே. |
(இ - ள்.) என் மனமே - (தலைவியின் பிரிவாற்றுன்புறுகின்ற) என் மனமே! கரைகோலித்தடுத்தலான் நிலைபெற்ற பெரிய நீர்ப்பெருக்கு அச்சிறை உடைய வழிப்படச் சேறல்போல (என்மாட்டுள்ள) அன்பான் (தலைவியின்) உள்ளமானது முன்னர் விரைந்துசெல்ல (அதன் பின்னர்) பொறுமையாக வந்து பொற்கொம்புபோலத் தளர்ந்து (அப்)பொழில் அழகான் நிறைபடத் தலைவி நின்றநிலைமையினை மறவா நிற்பாயாக வென்றாளென்க. (வி - ம்.) நெஞ்சகமே, தலைவியுள்ளம் விரையாநிற்கவும் அவள் பொறுமையுடன் வந்து நிறைநின்றதன்மையை மறவாதிருப்பாயாக வென்க. சிறை - தடை. துறை - வழி. மெய்ப்பாடு : உவகை. பயன் : தலைமகளை மகிழ்வித்தல். (362) |