| பரிவுற் றிறைவன் பாகற் குரைத்தல் அஃதாவது மகிழ்ச்சியிற் சிலவுரை நிகழ்த்திய தலைமகன் வலவா, அடுத்தகாலத்து அழியுந்தன்மையுள்ள உயிரைக் கொடுக்கும் அமிர்த சஞ்சீவியெனத் தலைவியைக் கூறுவோமெனின் அச்சஞ்சீவி நீங்கிய காலத்து அவ்வுயிர்கெடாது கலந்துசெறிந்த இன்பினை முற்றும் அடுத்து அப்பொழுதே பிரிந்து வருத்தும் இப்பெண்ணை இப்பழைய உலகின் கண் தொடுத்துச் சொல்லப்புகின் உயிரையன்றி வேறொன்றையு முவமையாகக் கூறவியலாதெனக் கூறாநிற்றல். | | அடுத்தாங் கழியுயிர் நல்கு மமிழ்தசஞ் சீவியெனின் | | | விடுத்தாங் குயிர்விளி யாது விராய்வெற்ற வின்பமுற்றும் | | | மடுத்தாங் ககன்று வருத்துமிம் மாதரைத் தேர்வலவா | | | தொடுத்தாங் கிசைப்பி னுயிரை யலாதில்லைத் தொல்புவியே. |
(இ - ள்.) தேரைக் கடாவுகின்ற பாகனே பொருந்தி அஞ்ஞான்றே அழியுமியல்பினையுடைய உயிரினை நிலைபெறச்செய்யும் அமிழ்த சஞ்சீவியென்று (இத்தலைவியைக் கூறுவோமெனின்) அவ்வமிழ்த சஞ்சீவி நீங்கியகாலத்து உயிரானது கெடாது (ஆதலான் அதனை யுவமை கூறலடாது) இப்பழைய உலகின்கண் (நம்முடன்) கலந்து செறிந்த இன்பினை முழுதும் நிறைத்து அக்கணமே நீங்கி வருத்தாநிற்கும் இப்பெண்மணிக்குவமை (சொற்களாற்) றொடுத்துச் சொல்லப்புக்கால் உயிரையன்றி வேறொன்றையும் உவமை கூறுதலில்லையென்றா னென்க. (வி - ம்.) அமிழ்த சஞ்சீவி தானடுத்து நீங்கிய உயிரை நல்குமியல்பினையுடையது. அச்சஞ்சீவியென இவளைக் கூறின் அச்சஞ்சீவி நீங்கிய காலத்து உயிர்கெடாது. இவளோ நாம் விரவிய காலத்தின் பினையும் தானகன்றபோது துன்பினையும் தருந்தன்மை கருதி "அடுத்தாங்கழியுயிர் நல்குமமிழ்த சஞ்சீவியெனின் விடுத்தாங்குயிர் விளியா" தென்றனன். ஆதலான் அச்சஞ்சீவி இவளை யொவ்வா தென்றாயிற்று. நீங்கிய உயிரையளிக்கும் இயல்பினையுடைய அமிழ்தசஞ்சீவி எனச் சொல்லின் அவ்வமிழ்த சஞ்சீவி நீங்கியகாலத்து உயிர் உடலினின்றும் நீங்காது உடலின்கண்ணே நிலைபெறும் என்பான். "விடுத்தாங்குயிர் விளியா" தென்றனன். இத்தலைவி யான் கலந்த காலத்துச் செறிந்த இன்பினை நிறைத்துப் பிரிந்தகாலத்து வருத்துமியல்புடையளாதலின் அமிழ்தசஞ்சீவியெனக் கூறலடாதென்பான். "வலவா, தொடுத்தாங்கிசைப்பின் உயிரையலாதில்லைத் தொல்புவியே" என்றனன். உயிருடன் கூடியகாலத்தியக்கமும் கூடாதகாலத் தஃதின்மையும் யானுடைமையால் இப்புவியின்கண்ணே தொடுத்துச் சொல்லின் உயிரெனவே கூறல்வேண்டும் என்பான். "தொடுத்தாங் கிசைப்பின் உயிரையலாதில்லைத் தொல்புவியே" என்றனன் என்க. மெய்ப்பாடு : உவகை. பயன் : தலைமகளை மகிழ்வித்தல். (363) பகற்குறி யிழக்கும் பரிசுதேர் பாங்கி தகக்கிளி மொழிக்குத் தளர்வொடு கிளத்தல் அஃதாவது இறைவன் பரிவுற்று பாகனுக்குரைத்தமை யறிந்த தோழி நம்மீது சீற்றங்கொண்ட வேங்கைதளிர்த்து தேனைத் துளித்துப் |