பக்கம் எண் :

1108தணிகைப் புராணம்

எதிர்விரும்பாது வெறுத்தவர்கள் புகழினோடு வாழ்ந்தனரென்ப துளதோ? தெய்வத்தன்மை பொருந்திய மேலாகிய கணியைப்போல மதித்து வணங்கும் தகுதியுளவாக மதித்தனம். அத்தன்மையுடைய எங்கள் தகுதியமைந்த உளத்தைப் பிளந்தாய். யாங்கள் காக்கும் தினையையு மழிப்பாய் இனித் துயில்வாயாக வெனக் கூறாநிற்றல்.

 வீழ்ந்தார் தமையெதிர் வீழா துலைய வெறுத்தவர்தாம்
 வாழ்ந்தார் புகழொடு மென்பதுண் டோதெய்வ வான்கணியின்
 தாழ்ந்தாந் தகமதித் தாமனை யேந்தகை யாருளங்கள்
 போழ்ந்தாய் தினையு மழிப்பா யினித்துயில் பூங்கணியே.

(இ - ள்.) மலர்களையுடைய வேங்கையே (தம்மை) விழைந்தவர்களை எதிராகத் (தாங்களும்) விழையாது அவர்கள் வருந்த வெறுப்பினைக் கொண்டவர்கள் புகழினோடு வாழ்ந்தனர் என்பது உளதோ? தெய்வத்தன்மை பொருந்திய மேலாகிய வேங்கைமரத்தைப்போலக் கருதி (யாங்கள்) வணங்கினாம் தகுதியா மதித்தனம். அத்தன்மையையுடைய எங்கள் தகுதியமைந்த உளங்களைப் பிளந்தனை. (யாங்கள் காவல்செய்கின்ற) தினைப்புனத்தினையு மழித்தல் செய்வாயாக. ஒரு கவலையுமின்றி இனித் துயில்வாயாக வென்றன ளென்க.

(வி - ம்.) பூங்கணி - தெய்வக்கணி ஒழிந்த கணிகள். அனையேம் - அத்தன்மையை யுடையயாம். யாங்கள் விரும்பினாம் நீவிர் விழைந்திலிர் என்பாள். "தெய்வவான் கணியிற் றாழ்ந்தாம் தகமதித்தாம்" என்றனள். யாம் விரும்பினாம் நீயிர் விரும்பிலீர் எனக் கணிக்குச் சொன்னமையைத் தலைவற்குங் கொள்ளல் குறிப்பு. இனித் தன்னை விரும்பிய தலைமகளைத் தான் விரும்புதல் கடனென்று தலைவனறிந்து கொள்ளும்வண்ணம் உரைத்தலே குறிப்பெனினும் அமையும். மெய்ப்பாடு : அழுகை. பயன் : அயர்வுயிர்த்தல்.

(367)

தினையொடு புலம்பி இனிவர லென்றல்

அஃதாவது சிறைப்புறக் கிளவியாற் றலைவற்குக் குறிப்புரை கிளந்த தோழி காக்கும்பொருட்டுச் சென்ற அற்றை நாட்டொட் டிற்றைவரை வண்டினைப்போலக் களிக்கும்பொருட்டு பெரிய இன்பினைக் காட்டிய நுங்களைக் கதிரையுடைய தினைகாள் கொல்லும் பொருட்டுத் தொடங்கிய வேங்கை அந்த முறைமையினையுடைய வினையினைத் தேவர்களுக்கும் நீக்கலரிதாகு மென்று உள்ளம் வருந்துகின்றேனெனக் கூறாநிற்றல்.

 அளிப்பான் புகுந்தவந் நாண்முத லின்றை யளவும்வண்டின்
 களிப்பான் பெருநலங் காட்டிய நும்மைக் கதிர்த்தினைகாள்
 விளிப்பான் புகுந்தது வேங்கையவ் வூழ்வினை விண்ணவர்க்கும்
 ஒளிப்பான் புகலரி தாமென்றென் றுள்ள முயங்குதுமே.

(இ - ள்.) தினைக் கதிர்காள்! நுங்களைக் காக்கும் பொருட்டுப் புகுந்த அற்றை நாட்டொட்டிற்றை யளவும் வண்டினைப்போலக் களிக்கும்படி பெரிய இன்பினைக் காட்டிய நுங்களைக் கொல்லும் பொருட்டுப் புக்கது வேங்கை.