பக்கம் எண் :

களவுப் படலம்1109

அவ்வூழ்வினை தேவர்கட்கும் ஒளிக்கும்பொருட்டு விரும்புதல் அரிதாகுமென்று உள்ளம் வருந்துவோமாக வென்றன ளென்க.

(வி - ம்.) அளிப்பான் புகுந்த - (தினையை நோக்குங்கால்) உங்களைக் காக்கும்பொருட்டுத் தொடங்கிய வெனவும், (தலைவனுக்குக் கொள்ளுங்கால்) எம்மை யளிக்கும் பொருட்டுப் புகுதல்செய்த எனவும் கொள்க. வண்டுகள் தேனுண்டு களிக்குமாறுபோல யாங்கள் நலனுண்டு களிக்கச் செய்தனை யென்பாள் "வண்டிற் களிப்பான் நலங்காட்டிய நும்மை" என்றனள். தலைவனே நீ வந்த நாட்டொட்டு இற்றைவரையும் நலம் விளைத்த உன்னைப் பிரிதற்கு வேங்கை பூத்த தென்பாள். "விளிப்பான் புகுந்தது வேங்கை" என்றனள். இவ்வூழ்வினை தேவர்களுக்கும் நீக்குதலரி தென்பாள் "விண்ணவர்க்குமரிதாம்" என்றனள். மெய்ப்பாடு : அழுகை. பயன் : செறிப்பறிவுறுத்தல்.

(368)

நாளை யிப்புன நண்ணல மறிகென
வாள்வினை யவர்வர வறிவுறீஇ விலக்கல்

அஃதாவது தினையொடு புலம்பி இனி வாரற்கவென்ற தோழி நீண்ட பொழில்களே! அருவித்திரள்களே! சுனைகளே! புனங்களே! சிகரங்களே! குயத்தினர்வருவர் விரவுறு நும்மை நீங்குகின்ற கொடு வினையே மென்கின்ற நாளும் நேர்ந்ததெனக் கூறாநிற்றல்.

 வாங்குங் குயத்தின ரின்னே வருகுவர் வார்பொழில்காள்
 தூங்குங் குளிரரு வித்திரள் காள்சுனை காள்புனங்காள்
 வீங்குங் குவட்டினங் காள்விளை யாட்டின் விரவுநும்மை
 நீங்குங் கொடுவினை யேமென்னும் வைகலு நேர்ந்ததுவே.

(இ - ள்.) நீண்ட சோலைகளே தங்குங் குளிர்ந்த அருவியின் கூட்டங்களே, சுனைகளே, புனங்களே, பெருத்த சிகரங்களே, வளைந்த அரிவாளினை யுடையார் இப்பொழுதே வருவார்கள் (ஆதலான்) விளையாட்டின் நிமித்தம் கலைக்கின்ற நும்மை நீங்குகின்ற கொடுவினை யுடையேம் என்கின்ற நாளும் நேர்ந்தனவென்றா ளென்க.

(வி - ம்.) பொழின் முதலியவைகளே குயத்தினர் வருவர் நும்மை நீங்குகின்ற கொடுவினை யுடையேம் என்கின்ற நாளும் நேர்ந்ததென்க. அறிகவெனத் தலைவனை நோக்கி அவன் வரவுவிலக்கல். ஆள்வினையவர் - தினை யறுக்குந் தொழிலினை யுடையவர். வாங்கும் - வளைந்த. அறிவுறீஇ - அறிவுறுத்தி. மெய்ப்பாடு : அழுகை. பயன் : செறிப்பறி வுறுத்தல்.

(369)

வரைவு பாணித்த பருவரல் கிளத்தல்

அஃதாவது நாளை இப்புனத்தின்கட் பொருந்தோ மெனத் தினை யறுக்குந் தொழிலினை யுடையார் வரவை அறிவுறுத்திய தோழி தலைவனே உன் நிறைந்த அருள் கிளியோப்புங் கருவியும், பரணும், தினைப்புனங் காவலும் மூன்றையும் நீக்கி மீள விழியினிடத்துத் திளைத்த புனலை