பக்கம் எண் :

களவுப் படலம்1115

மின்னுருக் காணாது பன்னிமிக் கழிதல்

அஃதாவது கருத்து வேறுபட வருத்தமிக் குரைத்த தலைவன் சுனையின்கட் டேனைச் சொரிகின்ற குவளைகள் தலைமகள் கண்களைக் காட்டாநிற்கக் கிளைகளிலீக்கள் கட்டிய தேன்கூடுகளா னனைகின்ற பொழிலின் கண்ணுள்ள மூங்கில்கள் தலைவியின் றோளினழகை நிலைபெறச் செய்ய மலர்களோடு கூடிய சோலையின்கண்ணுள்ள தளிர்கள் தலைவியின் நிறத்தைக் காட்ட யான் கவலாநிற்க நமக்குரித்தாகிய வேங்கைமரமும் தலைவியி்ன் சுணங்கினையும் காட்டாநின்ற தெனக் கூறாநிற்றல்.

 சுனைபொழி தேங்குவ ளைகண்கள் காட்டத் தொடுத்தவிறால்
 நனைபொழி சாரல் வளர்பணை தோளினை நாட்டமலர்க்
 கனைபொழில் வார்தளிர் மென்னிற மீட்டக் கவலமற்றியான்
 துனைபொழில் வேங்கையுங் காட்டிற்று மாதர் சுணங்கினையே.

(இ - ள்.) தேனைச் சொரிகின்ற சுனையின்கண்ணுள்ள குவளைமலர் கண்களினழகைக் காட்டாநிற்கத் தேனைச் சொரிகின்ற மலைப்பக்கத்தின் கண்ணே வளர்கின்ற மூங்கில்கள் இருதோள்களினழகை நிலை பெறுத்த மலர்கள் செறிந்த பொழிலின்கண் நீட்சிபொருந்திய தளிர்கள் (தலைவியின்) மெல்லிய நிறத்தைக்காட்ட (இவைகளைக் கண்ணுற்ற) யான் (அத்தலைவியை நினைந்து) கவலாநிற்க. நெருங்கிய அழகைப் பொழிகின்ற வேங்கைமரமும் அத்தலையின் சுணங்கினைக் காட்டா நின்றது. என் றீவினை யிருந்தவா றென்னே யென்றானென்க.

(வி - ம்.) துன் + ஐ + பொழில் வேங்கை யெனப்பிரிக்க. என் றீவினையிருந்தவா றென்னே யென்பது குறிப்பெச்சம். பன்னி - கூறி. நனை - கள். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீக்கல்.

(377)

அணங்குறு பதிபுக லரிதெனக் கலங்கல்

அஃதாவது மின்னுருக் காணாது பன்னிமிக் கழிந்த தலைமகன் பொறிகளமைத்த எயிலுடனே சேனையில்லையாயினும் மனனே மந்திரத்தாற் றடைசெய்த இடத்தின்கண் ணணுகாத நாகத்தினைப்போன்ற அழகு நிறைந்த ஊர் இதுவாயிருப்பினும் கருதற் கரிதாயிருக்கிறதெனக் கூறாநிற்றல்.

 எந்திரம் யாத்த வெயிலோ டகழில்லை யாயினும்வான்
 தந்திரம் யாத்தவெஞ் சேனையின் றாயினுந் தாழ்மனனே
 மந்திரம் யாத்த வயினணு காமணி நாகமெனச்
 சுந்தரம் யாத்தவ ளூரிது வாயினுஞ் சுட்டரிதே.

(இ - ள்.) தாழ்ந்த என் மனமே இயந்திரங்கள் பொருந்திய எயில் வட்டத்தோடு கூடிய அகழில்லையாயினும் தந்திரத்தினையுடைய படைகள் இல்லாதிருப்பினும் மந்திரத்தாற் கட்டியவிடத்திற் செல்லாத மணியினையுடைய நாகமென்று சொல்லும்வண்ணம் அழகை மேற்கொண்ட தலைவியின் ஊர் இதுவாயிருப்பினும் நம்மாற் கருதுதலும் அரிதாயிருந்த தென்றானென்க.