பக்கம் எண் :

1116தணிகைப் புராணம்

(வி - ம்.) எந்திரம் - மதிலுறுப்பாகிய பொறி. தந்திரம் - படை யொழுங்கு. யாத்தல் - தடைசெய்தல். சுந்தரம் - அழகு. சுட்டுதல் - கருதுதல். "மக்கட்சுட்டே" என்றார் ஆசிரியர் தொல்காப்பியனாரும். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்கல்.

(378)

இரவுக் குறிநினைந் தேந்திலை வேலோன்
பரவை யல்குற் பாங்கிக் குரைத்தல்

அஃதாவது அணங்குறு பதிபுக லரிதெனக் கலங்கிய தலைமகன் பகற்கண் உணவு கிடையாவிடின் புலிசென்று புகுதற்கரிய இடித்தும் புகுகின்ற மலையின்கண்ணுள்ள அணங்கே மிக்க வலியுடையார் காவலோடுகூடிய மலையின்கண்ணுள்ள சீறூர்க்கு விருந்தினனாக வருவேனெனக் கூறாநிற்றல்.

 பகலிரை மாறிய ஞான்றிர வூடு படர்ந்துழுவை
 புகலரி தாமிடத் தும்புகுந் தேகும் பொருப்பணங்கே
 இகலெறுழ் வார்சிலை யார்பெருங் காவ லியைந்தமர்நும்
 அகல்வரைச் சீறூர்க் கினிவிருந் தாக வணுகுதுமே.

(இ - ள்.) பகற்காலத்துணவு மாறிய காலத்து இரவின்கண்ணே புலிகள் புகுதற்கரிய இடங்களினும் புகுந்து உணவையுட்கொண்டு செல்லுகின்ற மலைக்கண்ணுள்ள தெய்வப்பெண் போன்றவளே ! மாறுபாட்டினைக் கொண்ட வலியுடன்கூடிய நீண்ட வில்லினையுடைய வீரர் பெரிய காவல் பொருந்தியமர்கின்ற நுங்கள் அகன்ற மலையின்கண்ணுள்ள சீறூர்க்கு இனிவிருந்தாகப் பொருந்துவோ மென்றானென்க.

(வி - ம்.) பகற்கண் இரைகிடையாவிடின் இரவில் உழுவை புகுதற்கியலாத இடத்தின்கண்ணும் புகும் பொருப்பின்கண்ணுள்ளவளே என்றதனால் பகற்குறி யொழிந்ததாயினும் இரவின்கண்ணொரு குறியை வைத்து அவ்விடத்தின்கண் வருவாய் என்பது உள்ளுறை. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் : ஆற்றாமை நீங்கல்.

(379)

தோம்பட லுளதெனத் தோழி மறுத்தல்

அஃதாவது இரவுக் குறிநினைந்து தன்பாற் கூறிய தலைமகனை நோக்கி, இயந்திரத்தின்கண்ணே கட்டிய விலங்குகளை விரும்பி அவ் வியந்திரத்தின்கண்ணே யாப்புண்டு வேங்கைகள் வருந்தும் மலையரசனே! வழிக்கண்ணே தேர் செல்லுமாயினும் இல்லங்கடோறும் யாவருமுடன்பட்ட வேலனாடற்கண் விளக்குகள் விடிந்த பின்னரல்லது கெடுதலில்லையெனத் தோழி மறுத்துக் கூறாநிற்றல்.

 பொறிவயின் யாத்த வருடைநன் மானைப் புகன்றுதப்பாக்
 குறிவயின் யாப்புண்டு வேங்கைகள் குன்றுங்குன் றத்துவெற்பா
 நெறிவயி னீளிர தஞ்செல்லு மாயினு நேர்ந்தெவரும்
 வெறிவயிற் சோடை விடிந்தன்றி யிற்றொறும் வீவதின்றே.