பக்கம் எண் :

களவுப் படலம்1117

(இ - ள்.) இயந்திரத்தின்கண்ணே கட்டிய பார்வை மிருகமாகிய வரையாட்டினையும் மானையும் விழைந்து (அவ்வியந்திரத்தின்கண் அகப்படல்) தப்பாது குறித்த விடத்தின்கண்ணே கட்டுப்பட்டு வேங்கைப் புலிகள் வலிகுறைதற் கேதுவாகிய மலையினையுடைய தலைவனே! வழிக் கண்ணே உனது நீண்ட தேர் முட்டுப்பாடில்லாது செல்லுமாயினும் இல்லங்கடோறும் யாவருமுடன்பட்டுச் செய்கின்ற வேலனாடற்கண் விளக்குகள் கெடுவதில்லை யென்க.

(வி - ம்.) இயந்திரத்திற்கட்டிய பார்வை மிருகமாகிய வரையாட்டினையும் மானையும் தப்பாமற் குறியின்கண்ணே கட்டுண்டு வேங்கைகள் தம்வலி குன்றுதற்கிடமாயுள்ளது நின்மலையாகலான் நீ எம்மாதை விரும்பி இரவின்கண் வருவாயாயின் காவலர் முதலியோர் கையகப்பட்டு வருந்துவாயென உள்ளுறை யமைந்திருத்தல் காண்க. புகன்று - விரும்பி. வெறி - வேலனாடல். சோடை - விளக்கு. தோம் - குற்றம். களவிற் செல்வார் தேரூர்ந்தும் சேறல் இயல்பாகலான், "நெறிவயினீளிரதஞ் செல்லுமாயினும்" என்றார். வேலனாடல் : அஃதாவது முருகனுக்குப் பூசைசெய்து கொண்டாடும் இடம். வீவதின்று - கெடுவதின்று. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வரைவுகடாதல்.

(380)

பின்னிலை முனிந்து பெருந்தகை கவறல்

அஃதாவது தோம்படலுளதெனத் தோழி மறுக்க பகற்குறிக்குப் பின்னின்ற தலைவன் இரவுக்குறி வேண்டி நெஞ்சமே கண்ணினுளிருக்குஞ் சாயையை என் கையில் நிறுவுவாயாகவென மண்ணிலடியைக் கோட்டி அழுகின்ற மழவினைப்போலப் பண்ணிசையைத் தாழ்க்கின்ற பாவையின்றன்மை யறிந்தும் எண்ணத்தையு மடிவிக்கின்ற இரவின் கண்ணே எனைப்பிடித்தலைவிக்கின்றாயெனக் கூறாநிற்றல்.

 கண்ணடிக் குள்ளொளிர் சாயையென் கையி னிருவுகென
 மண்ணடிக் கோட்டி யழுமழப் போலவென் வன்னெஞ்சமே
 பண்ணடிக் கின்ற பணிமொழிப் பாவை பரிசறிந்தும்
 எண்ணடிக் கின்ற விரவூ டலைத்தி யெனைப்பிடித்தே.

(இ - ள்.) நெஞ்சே! கண்ணினடியிலுள்ளே விளங்குகின்ற நிழலினை யென்கையி னிருவுவாயாகவென்று மண்ணிலடியைக் கோட்டி யழுகின்ற குழவியைப்போலப் பண்ணினைத் தாழப் பண்ணுகின்ற பணிந்த சொல்லையுடைய பாவை போல்பவளாகிய தலைவியின் தன்மையை யறிந்தும் என்னைப் பிடித்து எண்ணத்தையு மடிவிக்கின்ற இரவின்கண் அலைக்கின்றாயெனக் கூறாநின்றானென்க.

(வி - ம்.) பகற்குறிப் பின்னிற்றலையுடைய திரவுக்குறியாகலின் அவ்விரவுக்குறியை வெறுத்து தலைவன் கவற்சியுறுதல். அது "இரவூடலைத்தி" என்பதனாற் கொள்க. பின்னிலை - பின்னடக்கும் நிலைமை யென்பாருமுளர். மண்ணிலடியை வைத்தென்க. எண்ணத்தையு மடிக்கின்ற இரவென்றது எண்ணத்தா லித்தன்மைத்தென வறியமுடியாத இரவென்க. நெஞ்சே பரிசறிந்தும் பிடித்தலைத்தி யென்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்கல்.

(381)