பக்கம் எண் :

களவுப் படலம்1119

வல்லிக் கொடிபோல்பவளாகிய தலைவி கொள்ளாவண்ணம் தங்குவா
யென்றாளென்க.

(வி - ம்.) "ஆற்றாவுளத்தினை அண்ணலும்" முன்னிலைக்கண் படர்க்கைவந்த இடைவழு வமைதி. ஆற்றினையுடைய குறிச்சியென்க. விலங்குகள் இயமனைப்போலக் குறுக்கிட்டுச் செல்லுமா றென்க. ஆதவன் - சூரியன். மெய்ப்பாடு : அச்சம் சார்ந்த பெருமிதம். பயன் : இரவுக் குறியுடன்படல்.

(383)

மறிநேர் நோக்கி குறியிடங் கூறல்

அஃதாவது இரவுக் குறிநேர்தலாகிய முறையினை யுடன்பட்ட தோழியானவள் அசோகம் பொழில்சூழ்ந்து வேங்கைப் பூக்கள்மலிந்த கிளையினையுடைத்தாய்த் தினையாகிய உணவினைக்கொள்ளும் மயிலின் கூட்டினையுடையதாய் உறைகின்ற முற்றத்தோடு கூடியது எங்கள் பூங்கொம்பு போல்வாள் வைகிடமெனக் கூறாநிற்றல்.

 பிண்டிப் பொழில்புடை சூழ்ந்திள வேங்கை பிரசமென்பூ
 மண்டிப் பொதுளி வணங்கிய சாகை மலிந்துதினை
 உண்டிப் பசுமயிற் சேக்கைய தாயுறை முன்றிலதால்
 வண்டிப் பியமலர்க் கொம்பரன் னாண்மன்னும் வைகிடமே.

(இ - ள்.) அசோகின் பொழில்கள் சூழப்பெற்று இளமையாகிய வேங்கையினது தேனுடன்கூடிய மலர்கள் நெருங்கிச் செறிந்து வளைந்த கிளைகள் நிறைந்து தினையாகிய உணவினைக் கொள்கின்ற பசியமயில்கள் கட்டிய கூடுகளையுடைத்தாய்த் தங்குகின்ற முற்றத்தினை யுடையது வளவிய தெய்வத் தன்மையுடைய பூங்கொம்பு போல்பவளாகிய தலைவி நிலைபெற்று வைகிட
மென்றா ளென்க.

(வி - ம்.) வைகிடமானது முன்றிலதென்க. அம்முன்றிலே நீ கூடும் குறியிடமாகும் வேங்கைச் சாகையெனக் கூட்டுக. பூமண்டுதல் முதலியன சாகைக்கு விசேடமென வறிக. திப்பியம் - தெய்வத்தன்மை. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : குறியிடங் கூறல்.

(384)

சூழ்ந்தவன் வினவத் தோழி குறித்தல்

அஃதாவது மறிநேர் நோக்கியாகிய தோழியானவள் இரவுக்குறிக்கண் நீவரின் குன்றவராகிய நம்மவர் அணியுமலரும் விரையுமணிந்து வரல்வேண்டுமென்பது குறிப்பாற் றோன்றும் பொருட்டு, அவனை நோக்கி உன்வரையில் வாழ்நர்கள் இரவுக்குறிக்கண் அணியும் மலர்யா விரையாவென வினவாநிற்றல்.

 நாற்றிய செஞ்சடை வீராட்ட காசத்து நாதர்பொற்றாள்
 ஏற்றிய சென்னிய ரல்லா ருளத்தி னிருண்டகங்குற்
 போற்றிய வாடலி னுன்வரை வாழ்நர் புகன்றணியும்
 ஊற்றிய தேமலர் யாவிரை யாவை யுரைவள்ளலே.

(இ - ள்.) வள்ளற் றன்மையையுடைய இறைவனே! தொங்குகின்ற செவ்விய சடையினையுடைய வீராட்டகாசத்தின்கண் எழுந்தருளிய இறைவரது அழகிய திருவடியினைத் தாங்கிய தலையினையுடைய