பக்கம் எண் :

களவுப் படலம்1121

ஒழுகுகின்ற தேனின்கண் ணூறிய மகரந்தங்களோடு உரைத்தெடுத்த சந்தனத்தான் முழுகப்பெற்ற தோளினையுடையராய் மலைச் சுனையின்கண் மலர்ந்த மலர்களை நெறித்துக்கட்டிய மாலையினை யுடையராய் விளையாடுவ ரென்றா ளென்க.

(வி - ம்.) மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : குறியிட முணர்த்தல்.

(387)

அரவக லல்குற் காற்றாமை தணிதற்
கிரவுறு குறியும் வேண்டுமென் றியம்பல்

அஃதாவது தொடுத்த வினாவுக்குச் செப்பிறுத்த தோழி அகிலின் தூமத்தாற் பிணித்த குழலினையும் விரும்பத்தக்க மென்மையினையு முடைய தலைவியே! காமமாகிய பிணிக்கு மருந்தாயமைந்தது இரவு அவ்விரவின்கண் தலைவர் வந்து அப் பிணிக்கு மருந்து வடிவாகிக் கூடித் தணிப்பதல்லாமல் தனித்திருப்பின் நாம் அக்காமப் பிணிக்கு மருந்தறியாமெனக் கூறாநிற்றல்.

 காமப் பிணிக்கென் றமைத்தது கங்குலக் கங்குலின்வாய்த்
 தாமப் பிணிக்கு மருந்தாய்த் தணிப்பதல் லாற்றனித்து
 நாமப் பிணிக்கு மருந்தறி யாநறுங் காழகிலின்
 தூமப் பிணிக்குழற் காமரு சாயற் சுடர்த்தொடியே.

(இ - ள்.) நறுநாற்றம் பொருந்திய அகிற்கட்டையின் புகை யூட்டப்பெற்ற குழலினையும் கண்டார்க்கு விருப்பம் வருதற்கேதுவாகிய மென்மைத் தன்மையினையும் ஒளிபொருந்திய வளையலினையும் உடைய தலைவியே! காமமாகிய நோயை உளவாக்குதற்கென்று அயனால் அமைக்கப் பெற்ற இரவு அவ்விரவின்கண் நாம் அந்நோயை நீக்குதற்கு மருந்தாகத் தலைவரைக்கூடித் தணிப்பதல்லாமல் தனியாக விருந்து நாம் அந்நோயினை நீக்குதற்கு மருந்தறியாமென்றா ளென்க.

(வி - ம்.) காமப்பிணிக் கென்று - காமமாகிய பிணியை யுளவாக் கென்று. பிணிக்கு மருந்தாய் - பிணியை நீக்குதற்கு மருந்தாய். தலை வரையன்றி நாம் தனித்திருப்பின் அந்நோயினின்றும் நீங்குதலரிதென்பாள். "தனித்திருந்து நாமப் பிணிக்கு மருந்தறியா" மென்றனள். தூமப் பிணிக்குழல் - தூமம் ஊட்டப்பெற்ற குழல். மெய்ப்பாடு : இளிவரல். பயன் : ஆற்றாமை தணித்தல்

(388)

அடல்வே லண்ணல் ஆற்றாமை நுவறல்

அஃதாவது தலைவி யாற்றாமை தணிதற்கு இரவுக்குறி இன்றியமை யாதென்ற தோழி அன்பினாற்றழீஇக் கொண்ட குட்டிகளினோடு பொழிலின்கண் மந்திகள் துஞ்சும் சிலம்பன் தேனையுண்டு தெவிட்டா நிற்கும் வண்டு தன் பெடையைச் சேர்தலைக் கண்டு நீக்கிய உயிரினை யுடையான்போன்று அந்திக் காலத்தே பெருமூச்செறிந்து சென்றானெனக் கூறாநிற்றல்.

 வீக்கிய பாசப் பிணிப்பிற் றழீஇக்கொண்ட மென்பறழின்
 வாக்கிய தேம்பொழின் மந்திக டுஞ்சுமஞ் சார்சிலம்பன்