பக்கம் எண் :

1126தணிகைப் புராணம்

நந்தலைவர் (அவர் பிரிந்த காலத்து நீங்கிய) நமதழகைக் கொடுக்கும் வண்ணம் பொருந்தியகால மிதுவாகும் விரைவாக ஈண்டுப் பொருந்துவ ரென்று உணர்வாயாக வென்றன ளென்க.

(வி - ம்.) குளிப்பவையாகிய வேய்முத்த மென்க. அட்டிய - நெருங்கிய. "அட்டொளி மணியின் மோலி" என இவ்வாசிரியர் நாட்டுப் படலத்துக் கூறியவாற்றா னுணர்க. ஒட்டிய - பொருந்திய. வேய் மணியானது பூந்தாதிற் குளிப்ப. குறுந்துளியான் விளங்குதற் கேதுவாகிய பொருப்பர் என்றதனான் யாமும் அவராலே இன்பினையும் புகழினையும் அடைய வேண்டுமென்பது உள்ளுறை. போந்தவாறறிக. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : இரவுக் குறிநேர்தல்.

(395)

கொந்தொளி வேலோன் வந்தன னென்றல்

அஃதாவது நள்ளிரவின்கட் டலைவர் வருகுவரென்ற தோழி தலைவி மாட்டுக் கடனீரருந்திய மேகம் இடியை வெளியிட மயிலினங்களெழுந் தாரவாரிப்ப நாகங்களெல்லாஞ் சோர்வுற்று விழுந்தன. வெம்மை யான் வாடிய முல்லைக்கொடிகள் துன்பம் நீங்கினவெனக் கூறாநிற்றல்.

 அழுந்தலை வேலை யடுத்தெழு மேக முருமெறிய
 எழுந்தன தோகை மயிலின மார்ப்பொடு மீண்டரவம்
 விழுந்தன மேகலை மெல்லிய லாய்வெயி லத்துலந்த
 செழுந்தளிர்ப் பூங்கொடி முல்லைசிந் தாகுலஞ் சிந்தியதே.

(இ - ள்.) மேகலையை யணிந்த மென்மைத்தன்மை யுடைய தலைவியே, ஒன்றினோடொன்றிச் செறிந்தலைகின்ற கடலினைப் பொருந்தி எழாநின்ற மேகம் இடியினை வெளியிடாநிற்கத் தோகையுடன் கூடிய மயிலினங்கள் மகிழ்ச்சியுற் றார்ப்பரவத்துடனே எழுந்தன. (இவ் விடியோசை பொறாமல்) செறிந்த நாகங்கள் கீழேவிழுந்தன. (நீரின்றி) வெயிலின்கட் காய்ந்த செழுந்தளிர்களோடு கூடிய பொலிவுபெற்ற கொடியினையுடைய முல்லைகள் சிந்தாகுலத்தைச் சிந்தின. நந்தலைவர் வரையறுத்துச் சென்ற கார்காலம் வந்தது. அவரினித் தங்கார் கவலற்க வென்றாளென்க.

(வி - ம்.) அழுந்தல் - செறிதல். அலை - அலைகின்ற வேலை : ஆகுபெயர். மயில் ஆர்ப்புடன் எழுந்தவெனக் கூட்டுக. உரும் எறிதலால் நாகம் விழுந்தனவென்க. "நபமுகில் முழங்கி யேறியிடிவிட, நடுநடு நடுங்கி மாயும் அரவென" என்றார் பிறரும். அத்து : சாரியை. சிந்தா குலம் - துன்பம். சிந்தியது - கெடுத்தது. அவர் குறித்த பருவம் வந்தது காலம் நீட்டியார் கவலற்க வென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : தலைவன் வரவுரைத்தல்.

(396)

முயங்க வம்மென முற்றிழைக் குரைத்தல்

அஃதாவது கொந்தொளி வேலோன் வந்தன னென்றதோழி தலைவியினைக் கண்ணுற்று கனவிய காதணி யுடையாளே முலைகளிறுமாப்ப இரவின்கட் டலைவன் வேற்படையே துணையாக யானையினைப்போன்று நம் பக்கலில் வந்து பொருந்தினான். அவன் மார்பைத் தழுவாதமைக்குக் காரணம் சிறிதுமில்லையாதலால் வருவாயாகவெனக் கூறாநிற்றல்.