பக்கம் எண் :

1128தணிகைப் புராணம்

சுனையின்கண்ணுள்ள நீலமலர்கள் மலர்ந்தன. அதனைக் காண்பாய் என்பார். "பகலிற்றனைக் கருவாட்க ணிகர்க்குங் கொலாமிதுதா னெனச்செய், முனைக்கரு நோயுற் றுறங்குவ தாமென்று மொய்யிருளே சுனைக்கரு நீலமலர்ந்தது" என்றனள். ஆன்மாக்களியற்றிய இரு வினைப்பயனின் பக்குவமுணர்ந்து அவ்வினைக்கு விடையளிப்பவன் இறைவன். அவன் றங்குமிடம் வெங்கதிர்மண்டிலமாகலின் "வினைக் கருளீசன் விளங்குவெய்யோன்" என்றனர். தலைவியே உன்கண் பகற் காலத்திற் குவிந்துறங்காது மலர்ந்திருத்தலினால் அப்பகலில் மலராது குவிந்திருந்த நீலமலரை வென்றிருந்து இப்பொழுது இவ்விரவில் அந்நீலமலர் குவியாது மலர்ந்திருத்தலினாலே தன்னைப் பகலில் வென்றிருந்தகண் இவ்விரவில் மலராது குவிந்துறங்கு மென்பதையுட் கொண்டு "சுனைக்கருநீல மலர்ந்தது" என்றனர். எனவே அச்சுனையே குறியிடமாகச் செல்வாயாக வென்பது கருத்து. நீ காமத்தாலுறங்கா திருத்தலை நீலமலர் அறிந்திலதென்பாள். "உறங்குவதா" மென்றாள். ஈண்டு நோயென்பது காமநோயையன்று கண்ணானது நீலமலருக்குச் செய்த குவிதலாகிய நோயை அந்நோய் நான் அதனை ஒத்திலேன் என வருத்தமடைதல். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தலைமகளைக் குறியிடத்துய்த்தல்.

(398)

இடத்துய்த் தகல்பவள் மடத்தகைக் குரைத்தல்

அஃதாவது குறிவயிற் றலைவியை நெறியிடத்துய்த்த தோழி, சந்தனத்தால் பாத்திசெய்து தாதுக்களாகிய வெருவினைப் பெய்து பனி நீராகிய தண்ணீர் கால்யாத்து உயரும் முல்லைக்கொடிகள் பூத்துள்ளன. மயில்போல்வாளே நின்குழற்கு இக்கரிய இருளின்கண் பொருந்துவனவற்றைக் கொய்து வருவேன் நீ யாண்டு நிற்றியெனக் கூறாநிற்றல்.
 சந்தனச் செச்சையி னாலால வாலஞ் சமைத்துநறைக்
 கொந்தலர்த் தண்ணறுந் தாதெருப் பெய்து குளிர்பனிநீ
 ருந்தகைத் தோங்குநம் முல்லைகள் பூத்தவொண் டோகைகுழற்
 கிந்தமைக் காரிருள் வேய்வன கொய்திங்க ணெய்துவனே.

(இ - ள்.) மயில்போன்ற தலைவியே சந்தனமாகிய செச்சையினால் பாத்திசெய்து நறுநாற்றத்தோடு கூடிய கொத்தின்கணலர்ந்த தண்ணிய நல்லதாகிய எருவினைப் பெய்து குளிர்ந்த பனிநீராகிய நீரினையுங் கால் யாத்தலால் உயருகின்ற நாம் வளர்த்த முல்லைக்கொடிகளில் மலர்கள் மலர்ந்தன. நின் குழற்குப் பொருந்துவனவற்றை இக்கரிய இருளின் கட் கொய்துவந்து பொருந்துவேன். நீ யாண்டே நிற்றியென்றா ளென்க.

(வி - ம்.) ஆலவாலம் - பாத்தி. ஆலவாலஞ் சமைத்து தாதெருப் பெய்து நீர்கால் யாத்தலால் ஓங்கு முல்லைகள் பூத்தனவென்க. கொய்திங்கண் எய்துவன் ஆதலால் நீ இக்குறியிடத்துச் சென்று நின்று தலைவனைக் கூடி இன்புறுவாய் என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : குறியிடத்துய்த்து நீங்கல்.

(399)

மறிமரு ணோக்கி குறியெதிர் வுரைத்தல்

அஃதாவது குறியிடத்துத் தலைவியை நிறீஇ நீங்கிய பின்னர்த் தலைவன் தலைவியை எதிர்ப்பட்டு வாழைப்பழங்களைத் தின்று வரையாடும்