பக்கம் எண் :

களவுப் படலம்1129

மானினங்களும் மலையின்க ணுறங்குவதற்குச் சேர்ந்து செல்லும் மலையின் கண்ணுள்ள மொழியினையுடையாய்! செறிந்த கங்குலினிடத்து நீ பொருந்தியது என் நோயை நீக்குதற்கு மருந்து வேறில்லையென்று கூறா நிற்றல்.

 வார்ந்துயர் வாழைப் பொழிலின் வருடைநன் மான்கனிமிக்
 கார்ந்துழை நீண்ட வருநெறிக் குன்றத் தசைந்துறங்கச்
 சேர்ந்திவர் நாகத்துத் தேமொழி யாய்செறி கங்குலிங்கண்
 சார்ந்ததென் னோய்க்குப் பிறிதில்லை யென்றுகொ றாழ்குழலே.

(இ - ள்.) சிறுபுறந்தாழ் குழலினையுடையாய் நீண்டுயர் வாழைப் பொழிலின்கண் வருடையும் மானினங்களும் வாழைப்பழங்களை மிகுதியாகவுண்டு பக்கலில் நீண்டிருக்கும் அரிய நெறியினையுடைய குன்றத்துத் தங்கியுறங்கச் சேர்ந்து செல்கின்ற மலையின் கண்ணுள்ள தேன்போலுமினிய சொல்லினையுடையாய் என் நோயை நீக்குதற்கு மருந்து (உன்னைத் தவிர) வேறிலையென்று கருதியோ செறிந்த இருளின் கண் நீ பொருந்திய தென்க.

(வி - ம்.) என்று கொல் நீ சார்ந்ததென முடிக்க. சார்ந்தது என்பது வினா. வாழைப் பொழிலின்கண் வரையாடும் மானினங்களும் வாழைக்கனியை உண்டு அடுத்துள்ள அரிய வழியையுடைய குன்றத்தைத் தனக்கிடமாக உடையவளே என்றதனால் தலைவியே நின்னை அவ்வாறே அரிய நெறிகளைக் கடந்து குறியிடத்துத் தங்கி இன்பமனுபவித்தலையே எப்போதும் விழைகின்றேனென உள்ளுறை தோன்றியவாறு காண்க. மெய்ப்பாடு : உவகை. பயன் : மகிழ்வித்தல். குறியெதிர் வுரைத்தல் என்பது தலைவியைக் குறியிடத் தெதிர்ப்பட்ட தலைவன் கண்டு சொல்லல்.

(400)

அன்பு மீதூர அளவளாய்க் கலத்தல்

அஃதாவது மறிமருணோக்கி குறியின் கணெதிரக் கண்டு அளவளாவிய தலைவன் என் உயிரானது பான்மதியத்தையும், கொண்டலையும் அக்கொண்டலினுள்ளே களிப்பார்ந்த வண்டைப் பக்கத்தே செலுத்தி மூங்கில் தழைக்கக் குளிர்ந்த தேன்போலும் சொல்லினையுடைத்தாய் வந்தது யான் செய்த நல்வினைப் பயனே யாமெனக் கூறாநிற்றல்.

 பண்டே புரிந்த பழுதறு நல்வினை பான்மதியம்
 கொண்டேல நாறிய கொண்டல்கொண் டுள்ளே கொழுங்களியார்
 வண்டே மருங்கு விடுத்து மணிநிற வேய்தழைப்பத்
 தண்டேன் மொழியுடைத் தாய்வந்த வாறுயிர் தானெனவே.

(இ - ள்.) அருவமாகிய எனதுயிர், நுதலாகிய வெள்ளிய மதியினையுங் கொண்டு மயிர்ச்சாந்து நாறுகின்ற கூந்தலாகிய கொண்டலையுங் கொண்டு அம்மேகத்தினுள்ளே கொழுவிய களிப்பு நிறைந்த கண்ணாகிய வண்டினைப் பக்கத்தே செலவிடுத்துத் தோளாகிய நீலமணி போலும் நிறத்தினையுடைய மூங்கில்கள் தழையாநிற்பத் தண்ணிய தேன்போலு மினிய சொல்லினையுடைத்தாய் யான் பண்டைக்காலத்துச் செய்த நல்வினையானது இங்ஙன மிவ்வாறு வந்ததாகு மென்க.