பக்கம் எண் :

களவுப் படலம்1131

நுகர்ந்தறியார் திருமுகத்தினையும் செவ்விய கைகளினையும் கால்களையும் பரத்தலையுடைய அல்குலினையும் செவ்விய கயன் மீனையும் வாளினையுமொத்த கண்களையும் தாமரை மலரெனக் கூறாநிற்பர். அங்ஙனம் கூறலடாதென்க.

(வி - ம்.) பொங்கு - மிகுந்த. அயம் - நீர். அயராமை - வாடாமை : ஈண்டுக்குவியாமை. என்மர் இரவினும் இன்பத்தேனைப் பொழிதலை யறிந்திலர். தலைவியினுறுப்புக்கள் இரவினும் மலர்ந்து இன்பத்தேன் பொழிதலால் அவ்வுறுப்புக்களைத் தாமரை மலர்போல் ஒளிர்கின்றன வென்று உவமையணியாக்கிச் சொல்ல வேண்டுமேயன்றி அத்தாமரையாக உருவக அணியாக்கிக் கூறுதல் பொருந்தாது இரவின் மலரும் இயல்புள்ளதாகலான். என்போல் அயராமையென வியைக்க. வாட்கண் செங்கயலென்று கொள்ளற்க. செங்கயலையும் வாளையையும் ஒத்த கண்கள் பங்கயமென்பர் என அவற்றோடு சேர்த்தே பொருள் கொள்க. பரவையல்குல் - கடல்போன்ற வல்குல் எனினுமாம். தாமரை பகற்காலத்து மாத்திரம் தன்னை யடுத்தார்க்கு இன்பமாகிய தேனை யளிக்கின்றது. இரவிற்றாராது. தலைவியினுறுப்புக்களோ இரவினும் பகலினும் இன்பமாகிய தேனை அயராமை பொழிதலால். "இங்கயராமை மலர்ந்தின்பத் தேன்பொழி வெய்த்தில ரென்றார். எய்யாமை - அறியாமை. இதனைத் தொல் - சொல். உரி - "எய்யாமையே அறியாமையே" என்னும் சூத்திரத்தானறிக. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : நயப்புணர்த்தல்.

(403)

பரிவக றலைவனோ டரிவை கட்டுரைத்தல்

அஃதாவது தலைவி இன்பினை வியந்துரைத்த வயந்தருவே லோனா கிய தலைவனோடு வண்டுகள் இவரப்பெற்ற மாலையையுடைய தலைவனே கரடியின் குழாங்கள் ஒருபாலும் யானைக் கொம்பின் வேரினை யுண்கின்ற யாளிகள் ஒருபாலும் கோபத்துடன்கூடிய வேங்கைகள் யானைகளோடு அமர் செய்தல் ஒருபாலும் உள்ளனவாதலால் இவ்விருளிடத்து எங்ஙனம் போந்தாயெனத் தலைவி கூறாநிற்றல்.

 குரும்பிவன் மீகத் தகழ்ந்துணு மெட்குக் குழாமொருபால்
 விரும்பிவல் வேழத் துலவையின் வேர்மிசை மாவொருபால்
 அரும்பிய சீற்றத் துவாப்புலி யோடம ராட்டொருபால்
 சுரும்பிவர் தாரவ வெங்ஙனம் போந்தனை சூழிருட்கே.

(இ - ள்.) வண்டினங்கள் தேனை விரும்பி இவர்ந்து செல்கின்ற மாலையை யணிந்த தலைவனே ! புற்றாஞ்சோற்றினைப் புற்றிடத்துத் தோண்டி யுண்கின்ற கரடிக்கூட்டங்கள் ஒரு பக்கலிலும் விழைவுற்று வலிய யானையின் கொம்பின் வேரை உண்ணுகின்ற சீயங்கள் ஒரு பக்கலிலும் சீற்றமிக்குத் தோன்றும் யானைகள் வேங்கைகளோடு போரினைச் செய்தல் ஒரு பக்கலிலும் உள்ளன. ஆதலால் உலகினை வளைந்த இருளின்கண் நீ யெவ்வாறு வந்தனை சொல்வாயாக வென்றனளென்க.

(வி - ம்.) குரும்பி - புற்றாஞ்சோறு. வன்மீகம் - புற்று. எட்கு - கரடி. உலவை - கொம்பு. வேர் - அடிப்பாகம். மிசைமா - உண்ணும் சிங்கம். உவா - யானை. இவர்தல் - ஏறுதல். சூழிருள் - உலகினைவளைந்த இருள்.