பக்கம் எண் :

1132தணிகைப் புராணம்

மெய்ப்பாடு : அச்சம். பயன் : வரவு விலக்கி வரைவு கடாதல்.

(404)

இன்பநிறை வேலோன் துன்பமறை கிளவி

அஃதாவது பரிவகல் தலைவனொடு உறுதிச்சொற் கூறிய தலைவிக்கு விலங்குகளும், அலகையும், பூதமும், தீண்டி வருத்துந் தெய்வமும், இடியை வெளியிடும் மேகமும், பாம்பும், யாவும் தணிகையின் கண்ணுள்ள இறைவனை வணங்கல் வல்லமையுடையாரை யடுத்தாரையும் நோக்குமோ வெனக் கூறாநிற்றல்.

 பொல்லா விலங்கு மலகையும் பூதமும் போரணங்கும்
 ஒல்லா விரவி னுருமெறி மேகமு மூரரவும்
 எல்லா மெழிற்றணி காசலத் தேந்தல்செந் தாளிறைஞ்ச
 வல்லார் தமையடுத் தாரையு நோக்குங்கொன் மாணிழையே.

(இ - ள்.) மாட்சிமைப்பட்ட அணிகலங்களை யணிந்தவளே பொல்லாதனவாகிய விலங்கினங்களும், பேய்களும், பூதங்களும், துர்க்கையும் (நங்களவுக்குத் தடையாகப் பொருந்தா இரவின்கண் இடியினை வெளியிடுகின்ற மேகமும் ஊர்ந்து செல்கின்ற பாந்தளுமாகிய இவைகள் யாவும் தணிகை மலைக்கண் எழுந்தருளியிருக்கின்ற தலைவன்றாளை முறையான்) இறைஞ்சவல்ல அறிஞர்களையடுத்த அன்பர்களையும் நோக்குமோ வென்றானென்க.

(வி - ம்.) போரணங்கு - துர்க்கை. அவனடியார்க் கடியாரையும் பார்த்தல் செயுமோ வென்பான் "இறைஞ்சவல்லார் தமையடுத்தாரையும்" என்றான். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றுவித்தல்.

(405)

நீங்குறு வோலோன் பாங்கியிற் கூட்டல

அஃதாவது இன்பநிறை வேலோன் கிளவியால் துன்பமற்ற பின்னர் என்னாலெடுப்பிய மயிலும் துஞ்சுக. தாய் உறக்கஞ் செய்த இளமாக்களும் கண்படுக்க. என்னை யடுத்தற்கியைந்த பாங்கியும் நீயும் நித்திரை செய்க. நுங்களை விடுத்தலியையாத உள்ளத்தை உடைய யானும் அங்கே செல்கவெனக் கூறாநிற்றல்.

 எடுப்பிய தோகையுந் துஞ்சுக நீரொலி யாலிருந்தாய்
 படுப்பிய வாட்கண் படாவிள மாக்களுங் கண்படுக்க
 அடுப்பியை பாங்கியு நீயு மணையி னனந்தல்கொள்க
 விடுப்பியை யாவுளத் தேனுமங் கேசெல்க மின்கொடியே.

(இ - ள்.) என்னாலுண்டான சுனை நீரொலியால் துயில்நீத்த மயில்களும் துயில்க. பெரியதாய் மிருகங்கள் கண்படுப்ப வாட்கண்படாத இளங்குட்டிகளும் கண்படுக்க. என்னையடுத்தற்கு (நின்னொடு) இயைந்த தோழியும் அணையின் கண்ணே சென்று துயில்கொள்க. (உங்களை) விட்டுப் பொருந்துதலியையாத மனத்தையுடையயானும் அவ்விடத்தேசெல்க வென்றனனென்க.