பக்கம் எண் :

1136தணிகைப் புராணம்

மலையின்கண் என்னோடு பொருந்துநள் போல நயமொழி காட்டியவள் நீங்கியவள்போல உரைத்தனள் இங்ஙனம் கூறற்குளவாய பாவம் யாதோவெனக் கூறாநிற்றல்.

 புள்ளுவர் பார்வை வலையொடு கண்ணி புறத்திருவி
 உள்ளுற யாத்துப் பறவையு மாவு முடற்றும்வெற்பின்
 நள்ளுநள் போல நயமொழி காட்டிய நங்கைபின்பு
 விள்ளுநள் போலுரைத் தாளென்ன பாவம் விளைந்ததுவே.

(இ - ள்.) நெஞ்சே ! வேடர்கள் பார்வை மிருகங்களுக்குப் பக்கத்தே வலையினோடு கண்ணியையும் இருத்தி (அவைகளினுள்ளே) கட்டுப்படுத்திப் பறவையினங்களையும் மிருகங்களையும் வருத்துகின்ற மலையின்கண் என்னுடன் பொருந்துபவள் போல நயத்தினுடன் கூடிய இன்சொற் கூறிய நங்கையானவள் பின்னர் பகையுடையவள்போல வார்த்தைகள் கூறினள். இங்ஙனம் கூறற்கு எத்தன்மையான பாவம் முதிர்ந்ததோ யாமறியோம் என்றனன் என்க.

(வி - ம்.) காட்டிய நங்கை உரைத்தாள் என்ன பாவம் விளைந்ததோ வென்க. புள்ளுவர் - வேடர். வேடர் பார்வை மிருகங்களோடு வலையும் கண்ணியும் புறத்தே இருவி உள்ளுற அகப்படுத்தற் கேதுவாகிய வெற்பென்க. நள்ளுநள் - நட்புடையாள். விள்ளுநள் - பகையுடையாள். நள்ளுநள்போல நயமொழி காட்டியமை முன்னர் வலம்புரி வாய்வைத்தமையானும் விள்ளுநள் போலுரைத்தமை "இரவில் வாரற்க" என்றுரைத்தமையானும் அறிக. மானைக்காட்டி மானைப்பிடிக்கும் வேடர்களால் இல்லில் வளர்க்கப்படுவது பார்வை. மெய்ப்பாடு : அச்சம். பயன் : ஆற்றாமை நீங்கல்.

(411)

ஆகிய பரிவு பாகற் குரைத்தல்

அஃதாவது பாங்கி கேட்பப் பையுளெய்தி நெஞ்சினோடு கூறிய தலைவன் பாகனே ! நெஞ்சினோடு மாறுகொள்ளேமாய்ச் செல்வோமெனில் என்னுடலும் நெஞ்சும் தம்முட் செறிந்தில யாம் பேசுவதனாற் பயனென்னை யெனக் கூறாநிற்றல்.

 அணங்கோ கடலி னமிழ்தோ வணிமயி லோவெனப்பொற்
 சுணங்கோ டெழுமுலை யாள்புறத் தேசென்று சூழ்ந்தநெஞ்சிற்
 பிணங்கோ முடங்குவ மோவெனின் வாய்ந்தில பேசுவதென்
 கணங்கோடி காவதங் காமரு தேருந்துங் கையவனே.

(இ - ள்.) ஒரு கணப்பொழுதின் கட்கோடி காவததூரந் தேரினைக் கடாவுகின்ற கையினையுடைய பாகனே தெய்வமோ, கடலின்கண் உளவாகிய அமிழ்தமோ, அழகிய மயிலோவென்று சொல்லப் பொன்போன்ற சுணங்கினோடு தோன்றுகின்ற தனத்தினையுடைய தலைவி மாட்டுச் சென்று சுற்றிய நெஞ்சினோடு மாறுபாடு கொள்ளேமாய்ச் சேர்வோமென்னில் என்னுடம்பும் நெஞ்சும் தம்முட் சேர்ந்தில யாம் பேசுவதினாற் பயனென்னை யென்றானென்க.