பக்கம் எண் :

1140தணிகைப் புராணம்

ஆகாயம் வரையும் நீண்ட மலையினிடத்துக் குறியிடத்துப் பொய்த்து வருத்தும் தண்ணளியில்லாத தலைவனை யானுடைத்தாயிருத்தல் போல நீயுமுடையாய் போலும். ஆகையால் இங்ஙனம் வருந்துகின்றா யென்க.

(வி - ம்.) உற்பலமே தலைவனை நீயுங்கொலென்றதனால் உற்பலத் திற்குள்ள செயல் தலைவிமே லேற்றுங்கால், கண்ணீர் - கண்ணினின்றும் வரும் நீர். கருந்துகள் - தூசி. ஆடி - மூழ்கி. கருகி - முகம்வாடி. நெகிழ்ந்து - வருந்தி. உள்நீர் அழிய - உள்ளத்தின் கண்ணுள்ள தன்மை கெட எனப் பொருள் கொள்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : அல்ல குறிப்பட்டமை தலைவற் குணர்த்தல்.           

(417)

காணா வகையிற் பொழுது நனியிகந்து
மாணாத் துயரின் வாணுதல் கிளத்தல்

அஃதாவது மயக்கமுற்ற வருத்தத்தினை நீலமொடு சார்த்திக் கூறிய தலைவி காவலர் மடிந்திருத்தலால் இனித் தலைவர் வருவர் என்னும் விழை வெல்லாவற்றினையும் மதிதோன்றி யழித்தது. அம்மதி யொழிக. அன்னை முதலியவற்றான் அவ்வாறலந்தேன்; எல்லாம் ஓய்ந்தும் தலைவன் வாராமையால் அவனானுங் கவலையடைந்தேனெனக் கூறாநிற்றல்.

 காவலர் மாய வினிவரு வாரென்னுங் காதன்முற்றும்
 மேவலர் போன்மதி வீறி விளித்தது வீயவவ்வா
 றோவலந் தேனன்னை நாய்மனைக் கோழியி னோய்ந்துமெல்லாம்
 ஏவலந் தாங்கு மிறையினு மேசற வெய்தினனே.

(இ - ள்.) ஊர்காப்பாளர் மடிந்திருக்க (இனித்) தலைவர் வருவர் என்னுங் காதன் முழுமையும் பகைவர் போன்று மதியஞ் சீறிக்கெடுத்த தென்க. அம்மதிமறைய அன்னை யானும், நாயானும் மனையின் கண்ணுள்ள கோழியானும் அவ்வாறு வருந்தினேன்; எல்லாம் ஓய்ந்தும் பாணங்களை வன்மையுடன் றாங்கும் இறையானும் கவலை எய்தினே னென்றாளென்க.

(வி - ம்.) ஏ - பாணம். ஏசறவு - கவலை. காவலர் - ஊர் காப்பாளர். வீறி - கோபித்து. தலைவன் வரவிற்குத் தடையான இவைகளாற் துன்பமடைந்ததேயன்றித் தலைவன் வரப்பெறாமையால் அவனானுந் துன்பமடைந்தே னென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றுதல்.                      

(418)

குறித்தலைச் சென்றோ னெறிக்கவன் றிறத்தல்

அஃதாவது தலைவனைக் காணாவகையிற் கால நீட்டிக்கப்பெற்ற துன்பத்துடன் வருந்திய தலைவி செய்த குறியிடத்திற்குச் செல்லும் தலைவன் பொறிகாள் முன்னர்த் தலைவியுடன் கூடிய காலத்தில் கண்டு கேட்டுண்டுயிர்த்தலாகிய இன்பங்களை நீவிர் நிறைய நுகர்வித்த காலத்தும் அவளை விட்டு நீங்கற்கு மனமின்மையால் வருந்துவீர்கள் அவளின்று குறியிடத்துப் பொருந்தினாளில்லை. அவளை விட்டெங்ஙனம் மீளுவீர்கள். குறியிடத்தை யறிதற்கு நெஞ்சமே வருந்தினாய் திரும்புவாயெனக் கூறாநிற்றல்.