பக்கம் எண் :

1142தணிகைப் புராணம்

(இ - ள்.) யான் திருந்துதற் கேதுவாகிய ஏடி, இவ்விடத்து வேங்கை மரத்தின்கண் வண்டுகள் எறிதலைச் செய்து மொய்த்து நெருங்குவதை யாம் எக்காலத்து மறியாம். இன்றைக்கு இதோ நெருங்கிய அலர்களையுடைய வேங்கைமரத்தின்கண் அளிகள் மொய்ப்பன. அங்ஙன மொய்த்தலை யாராய்வாயாக நம்மைக் குறியிடத்துக்கூடாது பிரிந்த தலைவர் செங்கழுநீர்ப் பூக்களானாய நறுமணமுள்ள மாலை குறியிடத்தினின்றும் நீங்கி அளிக்கத்தக்க நம்முயிர் வருந்திய காலத்து நீக்குதற்கு மேலாகிய மருந்தாய் விளங்குவதைக் காண்பாயாக வென்றனள்.

(வி - ம்.) வேங்கையின் கண்ணுள்ள மலர்த்தேனை வண்டுணின் இறந்துபடும் ஆகையால் "வேங்கையின் அளியெறிந்து மூசுவதை என்று மெய்யாம்" என்றனர். தலைவன் அல்ல குறிப்பட்ட காலத்துத் தான் வந்தமை தோன்றத்தான் கையுறையாகக் கொணர்ந்த செங்கழுநீர் மாலையைத்தான் வந்ததற் கறிகுறியாக. இட்டுச் செல்வான் என்பது தோன்ற "செறிந்தலர் வேங்கையின் அளிமொய்ப்பன ஆய், மாழ்கிய போதைக்கு மருந்தாய் செங்கழுநீர் நறுங்கோதை பிறங்குவதென்றனர். கையறல் - செயலறல். இதனைக் "கையறு துன்பங்காட்டினுங் காட்டும்" என்னும் சிலப்பதிகார நாடுகாண் காதை அடியானு முரையானு முணர்க. அவ்வுரையாசிரியர் கையறு துன்பம் என்பதற்கு மீளாத்துன்பம் எனவும் கூறினார். "காமக் கடவுளுங் கையற்றேங்க" என்னும் அடைக்கலக் காதையினும் இப்பொருட்டாதல் காண்க. எய்யாமை - அறியாமை. இதனை "எய்யாமையே அறியாமை" என்னும் தொல். சொல், உரியியற் சூத்திரத்தானறிக. ஏடி தோழி முன்னிலைப் பெயர். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை தணிதல்.

(420)

தன்பிழைப் பாகத் தழீஇத் தேறல்

அஃதாவது தலைவனைக் காண வேண்டுமென்ற விழைவாற்றலைவி குறியிடத்திற் சென்று அவன்பாலுள்ள விருப்பினால் செயலற்றுக் கூறிய தலைவியை யண்மித் தோழி திரண்ட வளையினையுடையாய் ஒலிக்கும் பறவை தங்குகின்ற மரச்சூழலும் அலர்களா லலம்பும் சுனையிடமும் நீக்கி ஐயுறவில்லாக் குறியிடத்தை யான் கூறியிருப்பேனானால் தலைவன் வருத்தத்துடன் போவதுளதோ அங்ஙனம் செல்லற்குக் காரணம் என் பிழைப்பேயன்றி இறைவன் பிழைப்பல்லவெனக் கூறாநிற்றல்.

 சிலம்புங் குருகுறை நீண்மரச் சூழலுஞ் சிந்தலர்கட்
 கலம்புங் கடிச்சுனைச் சூழலு நீக்கி யயிர்ப்பிலதோர்
 நிலம்புஞ்ச வெள்வளை யாய்கிளந் தேனெனி னீடிரவில்
 புலம்புந் தலைவ னடுத்தணங் கோடங்குப் போவதுண்டே.

(இ - ள்.) திரண்ட வளையினையணிந்த தலைவியே ! ஒலிக்கின்ற பறவையினங்கள் இறை கொள்கின்ற மரங்களினையுடைய சூழலினையும் உதிர்கின்ற மலர்களா னலம்புதல் செய்யும் சுனைகளையுடைய இடத்தினையும் நீக்கி ஐயுறவு கொள்ளாத குறியிடத்தை விளங்கக் கூறியிருப்பேனாயின் இந்நீண்ட இரவின்கண் தனிமையுறுகின்ற தலைவன் பொருந்திய துன்பத்தினோடு அவனூர்க்குப் போவதுளதோ இஃதென் பிழைப்பன்றி இறைவன் பிழைப்பன்று என்றனளென்க.