பக்கம் எண் :

களவுப் படலம்1143

(வி - ம்.) மரச்சூழலும் சுனைச்சூழலும் குறியிட மாகாது நீக்கி அயிராத குறியிடத்தை யான் கூறியிருப்பின் தலைவனடுத்துப் போவதுண்டோ வென்க. இஃதென் பிழைப்பேயன்றி இறையவன் பிழைப்பன்றென்பது குறிப்பெச்சம். மரச்சூழலிலும் சுனைச்சூழலிலும் தலைவன் வந்து அலரை யுதிர்த்தும் பறவையை எழுப்பலுமின்றி இயல்பாக நிகழ்ந்தமையான் தலைவன் செய்த குறியென்று வந்து குறிபொய்த்துப் போயினன் என்பாள் "குருகுறை நீண்மரச் சூழலும் சிந்தலர்கட் கலம்பும் கடிச்சுனைச் சூழலும் நீக்கி அயர்ப்பிலதோர் நிலம்" எனக் கூறினாள்.

சிலம்பல் - ஒலித்தல். அலம்பல் - ததும்புதல். சூழல் - இடம். நிலம் - ஈண்டுக் குறியிடம். அங்கு - தன்னூருக்கு. அணங்கு - வருத்தம். புஞ்சம் - திரட்சி. புலம்பு - தனிமை. மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல். இது தோழி கூற்று.

(421)

புகாக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்
பகாவிருந்திற் பைந்தொடி கிளத்தல்

அஃதாவது அல்ல குறிப்படுதலைத் தன் பிழைப்பாகத் தழீஇத் தேறிய தோழிக்குத் தலைவி பசியடுவதென்று அன்னை யேவலால் உண்ணப்படுவதை முன்னர்க் கொடுத்து வாய்பூசு நீரைக்கொண்டு நிகழ்வதை யோரேனாய் வீட்டின் புறத்தே யான் செல்ல விரும்பித் தழீஇ விடுவதை யானறிந்திலன் வலிமையானீக்கி விரைந்து சென்றேனெனக் கூறாநிற்றல்.

 அடுவது வன்பசி யென்றடுத் தாற்கன்னை யேவலிற்கை
 தொடுவது முன்னுய்த்துப் பூசுநன் னீர்கொடு தோழிமற்றியான்
 படுவது முன்னலன் பின்கடைச் செல்லப் பரிந்துதழீஇ
 விடுவது கண்டிலன் வன்மையி னீக்கி விரைந்தனனே.

(இ - ள்.) தோழி அன்னையும் யானும் (உணாக்கொள்ளுங்காலத்து) வன்மையோடு கூடிய பசி வருத்துகின்றது எனக்கூறி நம் மில்லின்கட் பொருந்திய தலைவற்கு (இன்னனென்று அறியாமையான்) தாயின் ஏவலால் தொடக்கடவனவாகிய உணவினை முன்னர்க் கொடுத்து (வாய் பூச) நீரைக்கொண்டு பின்னர் உளவாதலைக் கருதாது வீட்டின் பின்னர்ச் செல்ல என்னையவன் விரும்பித்தழீஇ விடுதலைக் கண்டேனில்லை. (அன்னை யறிவளெனக் கருதி) என் வலிமையானீக்கி விரைந்து சென்றன னென்க.

(வி - ம்.) தொடுவது - உணவு. பூசுநன்னீர் - வாய் முதலிய கழுவுநீர். புகா - உணவு. உய்த்துக் கொடுவென்னும் வினைகள் தலைவியின் வினைகள். விடுவது கண்டிலன் - தலைவன் விட்டிலன். தலைவன் இன்னது செய்வானென்பதனை யாம் முன்ன மறிந்தில மென்பாள் "படுவது முன்னவன் பின்கடை செல்ல" வென்றாள். மெய்ப்பாடு : அச்சம். பயன் : வரைவு கடாவல்.

(422)