| நின்னுள்ளமானது எங்களிடத்தே பொருந்தி எங்களை விரும்புதற்கிடஞ் சிறிதாய காலத்தும் என் பேதைத்தன்மை யுடையாள் மனமானது (பெண்களுக்கியல்பான) நாணமுளவாதலுக் கிடம் பெரிதாயிரா நின்றது அதனால் யாதொன்றும் சொல்லாளென்க. (வி - ம்.) எங்களிடத்தில் வரவர அன்பிற் குழைவாயாயினும் எங்கள் தலைவி உன்னை நாயகனாகவே கருத நாணமுறுகின்றனள். அந்நாணால் ஒன்றும் சொல்லாள் என்பாள். "பேணுக்கிடஞ் சிறிதாகிய ஞான்றும் நாணுக்கிடம் பெரிதாயது நவிற்றுவது காணேன்" என்றனள். இங்கே - எங்களிடத்தில். மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவு கடாவல். (424) காவன் மிகுதி மேவரு கிளவி அஃதாவது பலரும் கூறும் அம்பலானும் அலரானும் நாணந்தலைவிக் கதிகரித்தலைக் கிளந்ததோழி, புகழினையுடையாய் ! வண்டு கூட்டுண்ணுந் தார்ப்புய முடையானே ! எங்கள் தலைவி கூட்டமின்மையாற் சிவந்த கண்ணோடழுங்காநிற்ப அன்னை தூங்காநிற்பாள் யான் செய்வதியாதெனக் கூறாநிற்றல். | | கழுது முறங்குங் கனையிருள் யாமத்துக் காரிகையாள் | | | கொழுது வரிவண்டு கூட்டுணுந் தார்ப்புயங் கூட்டமின்றி | | | அழுது சிவந்தகண் ணோடழுங் காநிற்ப வன்னைதுஞ்சாள் | | | எழுது மிரும்புக ழோயினி யான்செய்வ தென்னருளே. |
(இ - ள்.) திக்கிடமெல்லாம் பொறித்த புகழினையுடையவனே ! பாட்டினைப் பாடுகின்ற வண்டினங்கள் மூக்காற் கிண்டிக் கொள்ளை கொண்டுண்ணும் மாலையினை யணிந்த தோளினை யுடையவனே ! பேய்களும் துயில்கொள்ளும் செறிந்த இருளினோடு கூடிய நடு யாமத்தின் கண்ணும் அழகினையுடைய தலைவி அழுதலாற் சிவப்புற்ற கண்ணினோடு வருந்தாநிற்ப அன்னையுந் துயில் கொள்ளாள் ஆதலால் யான் செய்யத்தக்கது இன்னதென் றருள்செய்வாயாக வென்றன ளென்க. (வி - ம்.) காரிகையாள் கூட்டமின்றி அழுங்காநிற்ப அன்னை தூங்காள். இனி யான் செய்வது யாது அருள் செய்வாயென்க. கழுது - பேய். எழுதும் இரும்புகழோய் - திக்கெங்கணும் பொறித்த புகழை யுடையவனே யென்க. கூட்டம் - ஈண்டுப் புணர்ச்சி. கூட்டுணும் - கொள்ளை கொண்டுண்ணும். காவன் மிகுதியான் துன்பமிகுதல் கருதியத் துன்ப மிகுதியால் பின்னரும் "எழுதும் இரும்புகழோய்" என விளித்தார். மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவு கடாவல். (425) ஆற்றது தீமை யறிவுறு கலக்கம் அஃதாவது காவன் மிகுதியாற் கவன்றுரைத்த தோழிக்குத் தலைவி கரிய நுனியையுடைய தனங்களையுடையாய் ! நம்மழகு ஈண்டுக்கெட அறுவகைச் சைவ சமயங்களையும் உளவாக்கிய இறைவன் சினத்தை யொத்து இடியானது கோபித்து ஒலித்தல் செய்யும் மலைப்பக்கத்துத் திரண்ட மணியைத் தருகின்ற பாம்பினங்கள் இயங்குகின்ற வழிக்கண் வாராதிருத்தல் நன்றாமெனக் கூறாநிற்றல். |