பக்கம் எண் :

களவுப் படலம்1147

நீண்டகாலம் உயிருடன் வாழும் வண்ணம் சந்திரன் மாட்டுள்ள அமிழ்தினை விழைந்து உண்பராதலின் "உம்பரார் விழை வாண்மதி" என்றார். ஊர்விழவு முதலியன புணர்ச்சியிடை யீடாதல் கருதி "மாழ்குவர்" என்றார். ஏறு - இடியேறு. தார்ப்புயன் அண்மைவிளி. மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவு கடாதல்.

(427)

அவனளி சிறந்துழிக் கவர்மனை கிளத்தல்

அஃதாவது சந்திரன் பொருந்திய இரவின் கண்ணே தலைவன் வருகையைக் கண்ணுற்று இன்புறாத தலைவி மல பரிபாகம் உற்ற உயிரினது ஆணவமலம் நீங்க ஞானம் தோன்றினாற்போல (கடனீரை யுண்டு நிறைந்த சூலால்) வருந்திய மேகமானது வெளியிட்ட மின்னினாலும் காண்பரிதாயவழியில் எதிரே வருகின்ற விலங்கினங்களும் தெரியாத இரவின்கண் அன்பால் வருவதற்குப் பொருந்திய காதலரைக் கண்ணிய மனமும் வருந்துவதெனக் கூறாநிற்றல்.

 திருந்திய வாருயிர் மாசறத் தோன்றிய செவ்வியன்ன
 வருந்திய மேகம் வழங்குமின் னான்வழி காண்பரிதால்
 இருந்தியன் மாவெதிர் வுந்தெரி யாதிர வூடுநம்பால்
 பொருந்திய காதலர்க் கண்ணிய வுள்ளும் புழுங்குவதே.

(இ - ள்.) (ஆசிரியனை யடுத்துச் சமயம், விசேடம், நிருவாணம், முதலிய தீக்கைகளான் பரிபக்குவமுற்று) திருத்த முற்ற அரிய உயிர்கள் (அத்தீக்கைகளான்) ஆணவமலம் நீங்கச் சிவஞானந் தோன்றிய காலம்போல (கடனீரை யுண்டு நிறைந்த சூலான்) வருந்திய மேகம் வெளியிட்ட மின்னலால் நெறியினைக் காண்டலரிதாகும். தன் சேக்கைகளின்கண் தங்கி இரை கருதி இயலுகின்ற விலங்கினங்கள் எதிர்தலையும் அறிய முடியாத இரவின்கண் நம்மாட்டுப் பொருந்திய தலைவரைக் கருதிய மனமும் வருந்துவதென்றா ளென்க.

(வி - ம்.) துறையின் கண் கவர்மனை என்றிருத்தலான் தலைவி கவர்பட்டுக் கிளத்தலாவது "மின்னான் வழி காண்பரிது, எதிர்மாவுந் தெரியாது" என வருதல் உடன்பாடின்றியும் வாராமை விடுவனோவென நினைந்து புழுங்குவதென உடன்பட்டும் கூறியனவாம். மனை - ஈண்டுத் தலைவி. செவ்வியன்ன மின்னான் என இயைக்க. செவ்வி - அமையம். "உள்ளும்" உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவு கடாதல்.

(428)

நொந்துவாட் கண்ணி வந்தவழி யெள்ளல்

அஃதாவது தலைவன் தலைவி மாட்டு அளி சிறந்துழி அதனையறிந்து கவர்பட்ட மனத்தினையுடைய தலைவி நிறைந்த பசப்பின்கண் நுதலும் முலையும் மூழ்காநிற்ப உலகம் யாவும் பொருந்தும் துயிலின்கட் செல்லாது கண்கள் நீரின்கட் டிளைக்க நமக்கருளினை யளிக்கும் தலைவர் என் நோயினை யறிவாரல்லர் நன்னுதலே, யெனக் கூறாநிற்றல்.

 மல்கும் பசப்பின் மதிவா ணுதலிப மாமருப்பு
 வெல்குங் குமமுலை மூழ்க விரிநீ ருலகமெல்லாம்