பக்கம் எண் :

1150தணிகைப் புராணம்

(வி - ம்.) பூரித்த - பருத்த. ஞெமுங்கல் - தழுவல். பாரித்த - பருத்த. வேரி - நாற்றம். எமி - கூட்டம். தமி - என்பதன் எதிர்மறை. உன்னுடன் யான் கூடிய பகல் சிலவாயின ஆகையான் புல்லினிதாயினும் அதனாற் பயனென்னை யென்னை யென்க. என்னை - யாது. வாடையானுளவாகும் மெலிவறியாத நின்னோடென்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவு கடாதல்.

(432)

எய்திய மகிழ்ச்சி இகுளைக் குரைத்தல்

அஃதாவது முற்றிழை மடந்தை தலைவனை எதிர்ப்பட்டுழித் துன்பின் மிகுதியுரைத்த தலைவி அணங்கனையாய் ! தம் மாண்பினையிகந்து மலை நாடுடையான் அடுத்தலோடு பகை நீங்கித் தோள்கள் விம்முதலான் வளைகள் நீங்கின கொங்கைகள் விளர்ப்பு நீங்கி வம்பினைச் சிதர்த்தன. கண்கள் விளங்கின வெனக் கூறாநிற்றல்.

 தம்மாண் பிகந்து தணந்துழிக் கௌவை தரும்பகைதீர்ந்
 தம்மா வணங்கனை யாய்குன்ற நாட னடுத்தலொடும்
 விம்மா நெகிழ்வளை விண்டன தோள்கள் விளர்ப்பொருவிச்
 செம்மாந்து வம்பு சிதர்த்தன கொங்கை திவண்டகண்ணே.

(இ - ள்.) தெய்வ மகளை யொத்த தோழியே (இன்னநாள் வருவே னெனக் கூறி வரையறை செய்த) தமது மாட்சி கெட்டு (அவர்நம்மை) நீங்கிய காலத்துப் பழிச்சொல்லினைத் தரும் பகைமை நீங்கி என்ன ஆச்சரியம் ! மலைநாடுடையான் நம்மை யண்மியவுடன் தோள்கள் விம்மி நெகிழத்தக்க வளைகள் நீங்கின. கொங்கைகள் (அவன் பிரிவானுளதாகும்) விளர்ப்பினை நீங்கி இறுமாந்து கச்சினைச் சிதர்த்தன கண்கள் விளங்கின வென்றா ளென்க.

(வி - ம்.) மாண்பிகத்தல் - இன்னநாள் வருவேனெனத் தலைவிக்குக் கூறி வரையறுத்த படிவராது மாட்சிமை கெடல். தணந்துழிக் கௌவை தரும் குன்ற நாடனென்க. வம்பு - கச்சு. திவண்டன - விளங்கின. செம்மாப்பு - இறுமாப்பு. மெய்ப்பாடு : உவகை. பயன் : வரைவு கடாதல்.

(433)

பைந்தொடித் தலைவியைப் பாங்கி கழறல்

அஃதாவது எய்திய மகிழ்ச்சி இகுளைக் குரைத்த தலைவியைப் பாங்கி, கிளிமொழியாய்! இடமிடங்கடோறும் இருவிகள் தோன்றாநின்ற இதனை நம்மவர் அறிந்து புனத்தினீக்கி இற்செறிப்பாராயின் மலைநாடனை உணவினைத் துருவி வராநின்ற கிளியோப்பு மிடத்திற்குப் பொருந்திக் காண்டலரிதாகுமெனக்
கூறாநிற்றல்.

 இருவி யிடந்தொறும் பற்பல தோன்றின வீதெமர்தேர்ந்
 தொருவிநமைப்புனங் காவல்கொண் டாலொண் கிளிமொழியாய்
 கருவி முகிற்குலஞ் சூழ்வரை நாடனைக் காணரிதாம்
 துருவி வருங்கிளி யோப்பு வயின்வயிற் றுன்னலுற்றே.