| ஒண்டொடி தலைவ னுள்வழிப் படுதல் அஃதாவது விட்டுயிர்த் தழுங்கிய தலைவி மன்றின் கண்ணும் பொதியிற் கண்ணும் வில்விழாச் செய்யும் சூழலின் கண்ணும், துணங்கைக் கூத்தின் கண்ணும் என் மாட்டிரக்கங் கொள்ளாத தோளினையுடையானை யாங்கணுங் கண்டிலே னெனக் கூறாநிற்றல். | | சான்றோர் துவன்றிய மன்றமுந் தக்கோர் பொதியினும்வில் | | | ஆன்றோர் விழவயர் சூழலு மாத ரடுத்துவிழை | | | வான்றோ யுவகைத் துணங்கையி னானுமென் மாட்டிரங்காக் | | | கான்றோ யலங்கலந் தோளனை யாங்கணுங் கண்டிலனே. |
(இ - ள்.) (நின்னிற் பிரியேன் பிரியின் அறமல்லாதன செய்தேன் ஆவேனெனக் கூறி என்னைப் பிரிந்து) என் மாட்டிரக்கஞ் சிறிது மின்றாகிய வாசனை பொருந்திய மாலையினை யணிந்த தோளையுடையானை (அறிவானமைந்த) சான்றவர் நெருங்கிய மன்றத்தின்கண்ணும், தகுதி யுடையோர் எழுந்தருளி இருக்கும் பொதியின்கண்ணும், விற்றொழிலின் உயர்ந்தோர்களாகிய வயவர் நிகழ்த்துகின்ற விழவின் கண்ணும், பெண்களண்மி விழைகின்ற உயர்ந்த உவப்பினையுடைய கைகோத்தாடும் விழவின் கண்ணும் வேறு யாங்கணும் கண்டிலே னென்க. (வி - ம்.) தலைவனுள்ள விடத்தெல்லாம் நாடலென்பது துறை. மன்றம் - நியாயம் விசாரிக்கும் இடம். பொதியில், அங்ஙனமன்று; ஊர்க்கு வெளியே தக்கோர் கூடும் மரத்தடி. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (436) மஞ்ச னூர்புக நெஞ்சொடு கிளத்தல் அஃதாவது தலைவனுள்ளவிடம் ஆய்ந்த ஒள்ளிய வளையினையணிந்த தலைவி துன்பினோடு நாண் நீங்கி வெளிப்பட்டு வருந்துகின்ற நெஞ்சமே ! அக்காலத்து இடந்தலைப் பாட்டின்கண் நின்னிற் பிரியேன் பிரியின் உயிர்வாழேன் எனக் கூறியவர் பதிக்கு அடுப்போம் வருவாயாகவெனக் கூறாநிற்றல். | | எந்நாளு மின்ப மெளிதுறு சூழ்ச்சி யிருப்பவிட்டுப் | | | பன்னாளு மின்னற் படுவதென் னேபையு ளோடரிய | | | நன்னா ணிகக்கவின் னேபுறம் போந்து நலிநெஞ்சமே | | | அந்நா ளகன்றில மென்றார் பதிசென் றடுத்தும்வம்மே. |
(இ - ள்.) (அவர் பிரிவான் உளவாகும்) துன்பினோடு மாதர்க் கணிகலமாகிய அரிய நல்ல நாணம் நீங்க இப்பொழுது வெளிவந்து வருந்துகின்ற மனமே ! எக்காலத்தும் இன்பினை எளிதாக அடையும் சூழ்ச்சியிருக்க வதனைக் கைவிட்டுப் பல காலமும் துன்பப்படுவதென்ன காரணமோ யானறியேன் அக்காலத்து (இடந்தலைப் பாட்டின்கண் நின்னிற் பிரியேன் பிரியின் ஆற்றேன் எனக் கூறி) நீங்கிலே மென்றவரது திருப்பதியினை அடுப்போம் வருவாயாக வென்றா ளென்க. |