பக்கம் எண் :

1154தணிகைப் புராணம்

பொருந்திய மார்பரால் தெளிவொழியப்பெற்ற எனக்கொரு வேற்றுமையுமின்று பிரையினைப் பொருந்துதற் கேதுவாகிய பாலன்ன தன்மை எனக் கெஞ்ஞான்றும் பிறழ்ந்திலது. அவருக்கே பிறழ்ந்ததெனக் கூறாநின்றா ளென்க.

(வி - ம்.) கையினை விசும்பின்கணெடுத்துச் சரதம் கூறல். "வியாதனீட்டிய கையடு நந்தி" என்ற செய்யுளானறிக. பொய்ச்சத்திய மென்பது போதர "வாய்மொழி யென்றொழியாது" "புரையுறை வாய்மொழி" யென்றார். புரை - குற்றம். புகலல் - கருதல். விரும்பல் எனப் பொருள் கொள்வாருமுளர். தெளி வொழித்தமை - தலைவன் எஞ்ஞான்று வந்து கலப்பானோ வென்னுந் தலைவியின் தெளிவைத் தலைவனீக்கல். அது தலைவன் இன்ன நாளின்கண் வருவேனெனச் சரதம் செய்தமை. பைந்தொடி - தலைவி. தலைவியே ! நீ யான் சொன்ன வார்த்தைகளைக் குற்றமாக விரும்பற்க என என் தெளிவை நீக்க அதனை ஏற்றுக்கொண்ட எனக்கு ஒரு வேற்றுமையின்று. எனக்குப் பாலின் தன்மை பிறழ்ந்திலது. அவருக்கே பிறழ்ந்ததென்க. பிரையுற்றபால் தன்மை கெடுமாறுபோல அவர்க்குப் பிறழ்ந்த தென்க. மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல்.

(439)

அணங்கினை நோக்கிய வச்சமிக் குரைத்தல்

அஃதாவது நொந்து தெளிவொழித்த பைந்தொடியானவள் அன்பர் நான் எவ்வுழி நோக்கினும் அந்நோக்கிய பொருளாக எதிர்ந்தும், கனவின்கட் பொருந்தியும், நனவின் கண்ணே ஒத்தவிடமென்று தங்கியும் அவ்வுளத்தின்கண் தன்னானுளவாகிய துன்பன்றி வேறு துன்புண்டாகா வண்ணம் அகன்றிலரெனக்
கூறாநிற்றல்.

 எவ்வுழி நோக்கினு மவ்வுழி யவ்வவை யாயெதிர்ந்தும்
 செவ்வுழி வாட்கண் படுத்தாற் கனவத்துச் சேர்ந்தணைந்தும்
 ஒவ்வுழி யாமென் றுளத்தே நனவத்தொவ் வாதுறைந்தும்
 அவ்வுழி வேறணங் காகாமை யன்ப ரகன்றிலரே.

(இ - ள்.) யான் எவ்வெவ்விடங்களைக் கண்ணுறினும் அவ்வவ் விடங்களிலங்ஙனம் காணப்பட்ட பொருள்களாய்த் (தலைவர் என்னை வந்து) கூடியும், செவ்விடத்துக் கண்படை கொள்ளின் கனவின்கண்ணே வந்து சேர்ந்தும், நனவின்கண் (நாமிருத்தற்கு) ஒத்தவிடமா மென்று நீங்காது தங்கியும் அவ்வுளத்தின்கண் (அத்தலைவரானுளவாகிய நோயன்றி) வேறு துன்பமுண்டாகா வண்ணம் அன்பரகன்றில ரென்றா ளென்க.

(வி - ம்.) ஒவ்வாதுறைதல் - நீங்காமைத் தங்கல். அதனை "ஓவற விமைக்கும் சேண்விளங் கவிரொளி" என்றாற்போற் கொள்க. அணங்கு - துன்பம். நனவு - அறிவோடுகூடப் பொருளினை யறியுங் காலம். இதனை வட நூலார் சாக்கிரமென்ப. எதிர்ந்தும், அணைந்தும், உறைந்தும் அகன்றிலரென முடிக்க. செவ்வுழி - செவ்விய விடம். அணங்கினை நோக்கிய - அணங்கினை நோக்க. அச்சமிக்கு - அச்சமிகுந்து. அவ்வுழி - அவ்வுளத்தில். தலைவரானுளவாகும் நோயன்றி வேறு நோய் அவ்வுளத்திலாகாவிதம். அகன்றில ரென்க. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல்.

(440)