பக்கம் எண் :

களவுப் படலம்1161

 செஞ்சுவ னீவு மணிக்குழை வார்செவித்தே மொழியாய்
 அஞ்சுவ லாயை யெனினு மவரோ பிரிதல்செல்லார்
 நெஞ்சுவன் னோயி னிறுத்துந ரேனு நிணந்தநட்பின்
 எஞ்சுவ தென்று மெனக்கில்லை யன்ப ரிடத்தினன்றே.

(இ - ள்.) செவ்விய சுவலினைத் தடவுகின்ற மணிகள் இழைத்த குழையென்னு மணியினை யணிந்த செவியினையும் தேன்போன்ற இனிய சொல்லினையுமுடைய தோழியே ! தலைவர் நமது நெஞ்சினை வலிய நோயின்கண் நிறுத்துபவராக விருப்பினும் அவர் நம் உளத்தினின்றும் பிரிதலாகிய தொழிற்கட் சென்றிலர். யான் அன்னைக்கு அஞ்சுவேனாயினும் அன்பினை யுடைத்தாகிய நண்பினின்றும் குறைதல் (அவரிடத்தன்றி) என்னிடத்து எஞ்ஞான்றுமில்லை யென்றன ளென்க.

(வி - ம்.) நிணந்த - பசையுடைத்தாய. அன்று, ஏ : அசைகள். ஆயை அஞ்சுவலெனினும் நட்பிற்குறைதல் அவர்க்கேயன்றி எனக்கில்லை யென்றனள். மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவு கடாதல்.

(451)

நிகழ்ந்தமை செவிலிக்கு மறைத்தமை நிகழ்த்தல்

அஃதாவது வெளியிடாக் காலத்துத் தோழிக்கு வெளியிட்ட தலைவி தோழியே ! அவன் செய்த மணமும், அவன் பொய் பாராட்டலும் உள்ளே அதிகரிக்க விம்மியழாநிற்க அன்னை இன்னா அவலத்தைச் சொல்லென்று சொல்லத் தூசி விழியை மறைத்ததென்று கூறி மறைத்தே னெனக் கூறாநிற்றல்.

 வல்லிய மன்ன வெறுழான் கடியு மணந்தவன்று
 மெல்லிய நூலிடைக் கஞ்சிய பொய்யுமுள் விம்மவிம்மி
 அல்லியங் கோதைநல் லாயழ வன்னையின் னாவவலம்
 சொல்லிய வென்னக் கரந்தேன் றுகள்விழித் தூர்த்ததென்றே.

(இ - ள்.) அகவிதழோடு கூடிய மலர்களானாய அழகிய மாலையை யணிந்த நல்ல தோழியே ! புலியினையொத்த வலியினையுடைய தலைவன் (காட்சிக்கண் பான்மை வகையா னியற்றிய) மணத்தினையும் கூட்டமுற்ற அக்காலத்து மெல்லிய நூல்போன்ற இடையான திறுமென்றஞ்சிய நலம் பாராட்டலாகிய பொய்யினையும் (யான்) மனத்தின் கண்ணே அவ்விரண்டும் அதிகரித்தலான் விம்முதலுற் றழாநிற்கத் தாயானவள் (என்னை நோக்கி உனக்குளதாகிய) துன்பந்தருவனவாகிய அவலத்தினைச் சொல்லென்று கேட்க யான் காற்றானுளவாகிய துகள்கள் விழிகளை மறைத்தன வென்று கூறி (உள்ள செயலினை) மறைத்தன னென்றா ளென்க.

(வி - ம்.) கடியும் பொய்யும் உள்ளே விம்ம விம்மியழ அன்னை இன்னா அவலஞ் சொல்லென துகள்கள் விழிகள் தூர்த்தன வென்று கூறிக் கரந்தேனென்க. கண்ணிற்றுகள் படலான் நீர்ததும்பிற்றெனக் கூறல். மணந்தவன்றுரைத்த பொய்யுமென் றுரைப்பினுமமையும். இன்னா - துன்பம். கடி - ஈண்டுப் புணர்ச்சி. இடைக்கஞ்சிய பொய் -