| காட்சியின் பின்னர்த் தலைமகன் பொய் பாராட்டல். விம்ம - விம்மலால். சொல்லிய வென்ன - சொல்லென்ன. அவலம் - பயனின்மை. அல்லி அகவிதழ். வல்லியம் - புலி. மெய்ப்பாடு : அழுகை. பயன் : வரைவு கடாதல். (452) நாணுச் சுருங்கப் பேணிய கற்பிற் பெற்றுழி மெலிவு பெறாதுழிக் கிளத்தல் அஃதாவது நிகழ்ந்த செயலினைச் செவிலிக்கு மறைத்துக் கூறிய தலைவி தோழி ! சிலநாட் கூட்டம் சிதைவின்றித்தானே செல்ல முன்னாற் செய்த தவப்பயன் நிறைந்தன. அம்முறை மாறித் தலைவர் நீங்க யாந் துன்புறுதற்குக் காரணம் அந்நாட்டவறுமிக் காயதுபோலுமெனக் கூறாநிற்றல். | | சின்னாட் புணர்ச்சி சிதைவின்றித் தானே திகழ்ந்துசெல்ல | | | முன்னாட் டவப்பயன் முற்றின வேயம் முறைதிறம்பிப் | | | பன்னாட் டலைவர் பராமுக மாகிப் பருவருதற் | | | கந்நாட் டவறுமிக் காயது போலு மலர்முலையே. |
(இ - ள்.) பரந்த தனங்களையுடைய தோழியே ! (பான்மை வகையான் பொழிற்கண் நாமெதிர்ப்பட்டுக் கூடிய) புணர்ச்சி சிலநாள் சிதைதலின்றித் தானே விளங்கிச் செல்லாநிற்க முன்னர் யாம் செய்த தவத்தின் பயன் நிறைந்தனவேயாம். அம்முறையினின்று மாறுபட்டுப் பலநாளும் தலைவர் பராமுகமாதலால் நாம் துன்புறுதற்கு அக்காலத்து (யாமிழைத்த தவத்தின்கண் குற்ற மிகுதியாக உள்ளன போலுமென்றனளென்க. (வி - ம்.) சிலநாள் புணர்ச்சி செல்லத் தவப்பயனை முற்றுவித்தனம். பராமுக மாதலால் யாம் பருவருதற்கு அந்நாட்டவறு மிக்காயது போலுமென்க. அலர்முலை - தோழி. துறை மெலிவு பெற்றுழியும் பெறாதுழியும் அவனைப் புகழ்ந்து கூறல். அங்ஙனம் கூறுதற்குக் காரணம் கற்புடைமையே யென்க. "சின்னாட்புணர்ச்சி சிதைவின்றித் தானே திகழ்ந்து செல்ல முன்னாட்டவப் பயன் முற்றின" இவைகளான் மெலிவு பெறாமையும், "முறை திறம்பிப் பன்னாட்டலைவர் பராமுகமாகிப் பருவருதற்கந் நாட்டவறு மிக்காயது" இவைகளான் மெலிவு பெறுதலும் கூறப்பட்டது. மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (453) அலர்தா யறியிற் றலைவனோ டவன்பதி செல்ல வெண்ணிச் சொல்ல வலித்தல் அஃதாவது நாணுச்சுருங்கப் பேணிய கற்பிற் பெற்றுழி மலிவு பெறாதுழிக் கிளந்த தலைவி தோழியே ! அலரை யன்னையறியின் என்னுயிர் வாழ்த லருமைத்து என்று சிலம்பற்குரைப்பின் நம் வருத்தத்தை யறிந்து அவனூர்க்குச் செலுத்தமாட்டானோ வென்று கூறாநிற்றல். |