| | அறிந்தா லலரன்னை யென்னுயிர் வாழ்த லருங்குரைத்தென் | | | றெறிந்தா டளிமலர் வாயிசை பாடு மிணர்ப்பொதும்பர் | | | செறிந்தார் சிலம்பற் குரைப்பிற்றன் னூர்க்குத் தெரிந்துநம்மை | | | மறிந்தாழ் துயரென்று மின்றாக வுய்ப்பன்கொல் வண்கிளியே. |
(இ - ள்.) வளப்பம் பொருந்திய கிளிமொழியன்ன மொழியினையுடைய தோழியே ! (நங்கூட்டங் காரணமாக ஊரவர் கூறும்) பழிச் சொல்லினை நந்தாயறியின் என்னுயிர் உடலோடு கூடிவாழ்தல் அருமைத்தென்று ஒன்றினோடொன்று எறிதல் செய்தாடா நின்ற வண்டினங்கள் பூக்களிடத்து இசையிடுகின்ற கொத்துக்களோடுகூடிய இளமரக்காக்கள் பொருந்தியிருத்தலையுடைய தலைவற்கு நீ யுரைத்தால் (உன்னுரை கேட்டு) தனதூரினுக்கு (நந்துன்பினை) ஆராய்ந்து மடங்கி ஆழும்படியான துன்ப மொன்றுமில்லையாகச் செலுத்த மாட்டானோ வென்றன ளென்க. (வி - ம்.) பொதும்பர் செறிந்து ஆர்சிலம்பென்க. எறிந்தாடு அளியென்க. கிளி ஆகுபெயர். உய்ப்பன் என்பது பாடம். உய்ப்ப கொல்லென்பது அச்சுப்பிழை. மறிந்து - மடங்கி. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (454) ஆய மண்ணலை யறிந்தவை கூறல் அஃதாவது அலரினைத் தாயறியின் தலைவனோடு அவனூர்க்குச் செல்ல நினைத்த தலைவி தணிகாசலத்துக் கடவுளைத் தாழ்ந்துய்தலுற்ற வரைப்போல என்னைக் கண்டு அன்பர் உவகையெய்தலை யறிந்தவிழி அறியாத விழிக்கு உரைக்க விளையாட்டை வண்டலாய்த்துப் பூவையர் விட்டு நின்றனரெனக் கூறாநிற்றல். | | கைதலை வைத்துக் கணிகா சலத்துக் கடவுளைத்தாழ்ந் | | | துய்தலை யுற்றவர் போலவன் னாய்கண் டுவகையன்பர் | | | எய்தலை யெய்த்த விழியேயெய் யாத விழிக்கியம்பப் | | | பொய்தலை விட்டுநின் றார்வண்ட லாயத்துப் பூவையரே. |
(இ - ள்.) தோழியே ! இருகையினையுந் தலைமேற்கூப்பித் தணிகை மலையின் கண்ணுள்ள தெய்வத்தினை வணங்கிப் பிழைத்தலைப் பொருந்தி யவர்களைப்போலக் (அன்பர் என்னை) கண்ணுற்று உவப்பெய்தலை அறிந்த கண் அறியாத கண்ணினுக்குச் சொல்ல வண்டலாயத்தின் நாகணவாய்ப் புள்ளின் மொழியன்ன மொழியினையுடைய பெண்கள் விளையாட்டைவிட்டு நின்றன ரென்றா ளென்க. (வி - ம்.) தலைவி தலைவனைக் கண்டுவகையெய்தலை அறிந்த பெண்கள் அறியாத பெண்கட்கு கண்ணாற் குறித்துக்காட்டி அறிவித்து விளையாட்டுத் தொழிலில் நினைவிலராயிருந்தா ரென்பாள் "வண்டலாயத்துப் பூவையர் எய்த்த விழி எய்யாத விழிக்கியம்பப் பொய்தலைவிட்டு நின்றார்" என்றாள். எய்த்தல் - அறிதல். எய்யாத எதிர்மறை. துறை தலைவியின் கூற்று. போல உவகை யெய்தலை எனக் கூட்டுக. பொய்தல் - மகளிர் விளையாட்டு. மெய்ப்பாடு : அழுகையைச்சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (455) |