| தீயினையொத்த வெப்பத்தினைக் கக்குகின்ற செங்கதிர் மண்டிலம் உலகின் உள்ளவர்களெல்லாம் விழைவு மிகுதற் கேதுவாகிய மேகத்தினை உளவாக்குவதல்லவா (அதுபோல) துன்பமாகிய கடலின்கண் யான் விழுந்து மூழ்க (என்னை) நீங்கி அங்கெழுந்தருளி யிருப்பவரே எனதரிய உயிர்காவற் கிருப்பவராவ ரென்றா ளென்க. (வி - ம்.) உருப்பு - வெப்பம். விழுமம் - துன்பம். தனது கொடுங் கதிர்களால் உலகினைத் துன்புறுத்திப் பின்னர் மேகத்தை யுளவாக்கிச் செழிக்கச் செய்யும் செங்கதிர் மண்டிலம்போல எனக்குத் துன்பினையுளவாக்குமவரே பின்னர் இன்பஞ் செய்வர் என்பது போதர. "பருதி விளைப்பதுபோல விழுமக்கடலுள் யானழுந்தத் துறந்தங்கிருப்பவரேயென தாருயிர் காவற்கிருப்பவர்" என்றனள். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்கல். (462) பொழுது நீட்டிப்பப் பூங்கொடி கவறல் அஃதாவது தலைவனை இயற்பட மொழிந்த தலைவி கிளிமொழியன்ன மொழிகளையுடைய தோழியே ! தாழையும் கதவத்தையும் சூழையுந்திறந்து வருடி முலையினைப் புல்லும் ஊழையும் வேலர் மறந்தாராய் ஒழிந்தனரெனக் கூறாநிற்றல். | | தாழைத் திறந்து கதவந் திறந்துடற் சார்கலிங்கச் | | | சூழைத் திறந்து வருடித் துணைமுலை புல்லுமந்த | | | ஊழைத் திறந்தவழ் வேலரென் னோமறந் தாரொழிந்தார் | | | யாழைத் திறந்தக லின்றெனப் பேசு மிளங்கிளியே. |
(இ - ள்.) யாழினிசையை திறத்தாற்றகுதியன்றென்று சொல்லுஞ் சொல்லினையுடைய இளமை பொருந்திய கிளியினைப்போன்ற தோழியே ! முன்னர்த் தாழக்கோலினைத் திறத்தல் செய்து (பின்னர்) கதவத்தினையுந் திறத்தல் செய்து உடலினைச் சார்ந்த கலிங்கத்தின் சுற்றினையும் நீக்கி இரண்டாகிய தனங்களைத் தழுவுகின்ற அந்த முறையினை (எதிர்த்த பகைவரை யழிக்கும்) கூறுபாடு தங்குகின்ற வேற்படையார் மறந்தனராய் ஒழிந்தனரென்றா ளென்க. (வி - ம்.) தாழ் - தாழக்கோல். கலிங்கம் - உடை. ஊழ் - முறை. திறம் - வகை. தகல் - தகுதி. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல். (463) வருந்தொழிற் கருமை வாயில் கூறல் அஃதாவது தலைவன் வருதல் தாழ்த்தமை கண்டு வருந்திய தலைவியே ! வீதி துயின்றில. அரவத்தினை மன்றங்கடிந்தில. நகர் காப் பாளரோவிலர். ஆதலாற் செல்வர் காலமறிந்தன்றிச் சேர்தலிலரெனக் கூறாநிற்றல். | | ஆவண வீதி துயின்றில பேரர வங்கடவுட் | | | காவண மன்றங் கடிந்தில காவல ரோவிலரால் | | | தீவண வேல்வலச் செல்வர் பதன்றெரிந் தன்றியுறார் | | | பூவண மேனிநல் லாயிதற் கோசெல்லல் பூண்பதுவே. |
|