| | ஆறும் பருவத்த ளல்ல ளணங்கனை யாளண்ணலே | | | வீறும் பகலிற் பெறுதி யிரவிங்கு மேவலையே. |
(இ - ள்.) தலைமையாற் சிறந்த தலைவனே. (நீ யீண்டை யுறுங்கால்) இடையூறுகள் பலவுள்ளனவேயாம். (அவ்விடையூறுகள்) எனக்குப் பொருந்துவ தின்றென்று நீ சொல்லினும் (யாங்கள்) அதனைத் தெளியுந்தன்மையுடையே மல்லேம். நீ யீண்டுச் சேர்கின்ற காலம் சிறிது மாறுபடினும் துன்பந்தணியும் பருவத்தினையுடையளல்லளாய்த் தலைவியுள்ளனள். வேறொன்றற் கில்லாத சிறப்பினையுடைய பகற்கண்ணே இவளைப் பெறுவாய் இராக்காலத்தின்கண் இவண் பொருந்தாதே யென்றன ளென்க. (வி - ம்.) இனியொரு சாரார் இனி நீ தலைவியைப் பெறுவாயாக. "உறலின்மை யுரைப்பினும் யாம் தேறும்படியிலம்" என்பதற்கு இனி யான் இரவில் வருதல் செய்யேன் என்று சொல்லினும் எனக்கு நம்புதலில்லை யெனினு மொக்கும். எனவே இரவில் வாரேன் என நீ யுரைப்பினும் அவ்வுரை தவிர அவ்விரவில் வருவாயென்றாள் என்பது. அணங்கு ஈண்டுத் தலைவி. அஞர் - துன்பம் வீறு - பெருமை. உறலின்மை - (இடையூறு) உறுதலின்மை. மெய்ப்பாடு : அழுகை. பயன் : இரவுக்குறி விலக்கல். (466) பகல் வருவானைப் பாங்கி விலக்கல் அஃதாவது இரவு வருவானை விலக்கிய இகுளையானவள் பெருமை யையுடைய தலைவனே ! சாரற்கண்ணுள்ள பொழிலிடத்துப் போது செருகிக் குழலாளோடு சேர்ந்து உளங்க ளுருகிக் கூடும் உழுவலன் பெல்லாம் அலராகி ஏதமதாம். ஆதலாற் பகற்கண் வாரற்க வெனக் கூறாநிற்றல். | | முருகியங் காரி னியம்புபைஞ் சாரன்மொய்ம் பூம்பொழில்வாய்ச் | | | செருகியம் போது செறிகுழன் மாதொடு சேர்ந்துளங்கள் | | | உருகியங் காடு முழுவ லெல்லாமல ராயுலகில் | | | பெருகியங் கேதம தாம்பகல் வாரல் பெருமையனே. |
(இ - ள்.) பெருமையையுடைய தலைவனே ! முருகற்குரித்தாகிய வாச்சியங்கள் காரொலிபோல இயம்புகின்ற பசிய மலைப்பக்கத்துள்ள மொய்த்த பூக்களையுடைய சோலையினிடத்து அழகிய மலரும் பருவத்தரும்பினைச் செருகிச் செறிந்த குழலினையுடைய பெண்ணோடு கூடி (இருவர்) உளங்களும் உருகுதலுற்று ஆண்டுக் கூடுதலுறுகின்ற உழுவலன் பெல்லாம் உலகத்தினிடத்துப் பழிச்சொல்லாய்ப் பெருகுதலுற்று ஏதப்பாடுடையதாம் பகற்காலத்தின் கண்வாரற்க வென்றன ளென்க. (வி - ம்.) முருகற்காகிய இயம் - முருகியம். வாத்தியம். போது செருகி - மலர் செருகப்பட்டு. செருகிச் செறிந்த சூழலென்க. உளமுருகுதல் இருவர்க்கும் ஆமென்பார் உளங்கள் எனப் பன்மையாற் கூறினார். உழுவல் - எழுமையுந் தொடர்ந்த வன்பு. ஆடுதல் - கூடுதல். அங்கு ஆடுகின்ற உழுவலெல்லாம் அலராகிப் பெருகி ஏதமதாம் என்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : பகற்குறி விலக்கல். (467) |