பக்கம் எண் :

களவுப் படலம்1171

பகலினு மிரவினும் பயின்றுவரு கென்றல்

அஃதாவது பகற்கண்வருந் தலைவனை விலக்கிய தோழி முதல்வனே ! முலையெனும் சக்கரவாகப் பறவை நினது கையாகிய மரைமலரில் பகற்கண் மகிழ் மிகுதலும், நினது முகமாகிய மதியால் பதுமையை யொத்த தலைவியின் முகத்துப் பொருந்திய கண்ணாகிய சகோரப் பறவைகள் களித்தலும் குன்றத்தின்க ணுளவாமெனக் கூறாநிற்றல்.

 முற்றா முலையெனுஞ் சக்கர வாக முதல்வநின்கைப்
 பொற்றா மரையிற் பகன்மகிழ் கூர்தலும் பொங்கிருளிற்
 பற்றா நினது முகமதி யாலுயிர்ப் பாவைமுகத்
 துற்றார் சகோரங் களித்தலுங் குன்றத் துறுவனவே.

(இ - ள்.) முதல்வனே இளமை பொருந்திய முலையாகிய சக்கரவாகப் பறவைகள் நினது கையாகிய தாமரை மலரில் பகற்கண் மகிழ்ச்சி கூர்தலும், மிகுந்த இருளின்கண் (தலைவிக்குப்) பற்றுக்கோடாகிய முகமாகிய வெண்கதிர்க் கடவுளான் உயிருடன் கூடிய பதுமையை யொத்த தலைவியின் முகத்தின்கட் பொருந்திய கண்ணாகிய சகோரப் பறவைகள் களிப்படைதலும் குன்றத்தின் கண்ணுள்ளன. ஆதலான் இவ்விரு பொழுதின் கண்ணும் வருகவென்றா ளென்க.

(வி - ம்.) ஆதலான் இரண்டு பொழுதினும் வருகவென்பது குறிப்பெச்சம். இருவகைப் போதினும் இயன்ற காலத்து வருக வென்பது துறை. சக்கரவாகப் பறவை - தனம். இதனைத் "தப்பின்றிப் பகலில் வந்த சக்கரவாக மென்பன்" என்றார் பிறரும். மதியிடத் தமிர்தமுண்ணல் சகோரத்தியல்பாதலின் "பற்றா நினதுமுக மதியாலுயிர்ப்பாவை முகத்துற்றார் சகோரங்களித்தல் குன்றத்துறுவன" வென்றார். சகோரம் - நில்வருந்துபுள். இதனைச் "சகோரஞ் செம்போத்துக் குக்கில்" என்றார் பிறரும். இதனை நடுநாட்டிற் கள்ளிக்காக்கை எனக் கூறுவர். ஏனைய நாடுகளில் செம்போத்து, போத்து எனக் கூறுவர். மெய்ப்பாடு : அழுகை. பயன் : இருவகைக் குறியும் விலக்காமை.

(468)

பகலினு மிரவினு மகலிவ ணென்றல்

அஃதாவது பகலினு மிரவினும் பயின்று வருகென்ற தோழி அண்ணலே ! பகற்காலத்து இத்தலைவி கண்களைத் தாமரை யொப்பாக வெங்கதிர் மண்டிலத்தாற் சிறப்பெய்தி இராப்பொழுதின்கண் நினது முகமாகிய வெண்கதிர் மண்டிலத்தின் ஒளியால் விளக்கமுற்றாலும் அவளுள்ளம் புல்லுதற்குப் பொருந்தில தாதலால் இவ்விரு காலத்தும் இவண் வாரற்கவெனக் கூறாநிற்றல்.

 எல்லிற் கமல மிவள்விழி நேர விரவியிற்சீர்த்
 தல்லிற் குவளை நிகர்ப்ப நினதா னனமதியின்
 வில்லிற் கவினுவ தேனு முளமோ மிகவிடைந்தப்
 புல்லிற் கியைந்தில தண்ணால் வரலிரு போதுமிங்கே.

(இ - ள்.) அண்ணலே பகற்காலத்தின்கண் தாமரை மலர்கள் இத்தலைவியின் விழிகளை உவமையாகக் கொள்ள வெங்கதிர் மண்டிலத்