பக்கம் எண் :

களவுப் படலம்1179

ஞானத்தின்னிறைவைப்போல மாதுக்கு முறுவல் நிலவின. இடம் இல்லை. பெண்டன்மையானது தன்னெல்லை எவ்வளவுண்டோ அவ்வளவு நிரம்பிற்றெனக் கூறாநிற்றல்.

 முல்லை யளவு நிலாவின மூரன் முறுவலிடம்
 இல்லை யளவு முலைக்கினி மார்ப மிலகுபெண்மை
 எல்லை யளவு நிரம்பிற்று மாதுக் கிறமலநோய்
 ஒல்லை யளவு முலவாமெய்ஞ் ஞான வுவாவெனவே.

(இ - ள்.) மலநோயானது இறுதலான் விரைந்து சேருகின்ற கெடாத உண்மை ஞானத்தின் நிறைவைப்போல நந்தலைவிக்கு விளங்குகின்ற பெண்மைத்தன்மைதான் வளர்தற்கெல்லை வெவ்வளவுளதோ அவ்வளவு நிரம்பிற்று மூரலினையுடைய முறுவலானவை முல்லை யரும் பினளவாக நிலவின. இனி மார்பகத்தில் முலை பருத்தற்கிடமின்றாம் என்றன ளென்க.

(வி - ம்.) மூரன் முறுவல் நிலவின. மார்பில் முலைக்கு இடவளவு இல்லை. பெண்டன்மைதன்னெல்லை யெவ்வளவுண்டோ அவ்வளவு நிரம்பிற்று. மல நோயிற உண்மைஞான நிறைவதுபோல பெண்மை நிரம்பிற்றென்க. உவா - நிறைவு. இது செவிலி கூற்று. மெய்ப்பாடு : மருட்கை. பயன் : உற்ற துரைத்தல்.

(481)

தலைப்பெய்து கண்டோள் சாமியென் றயிர்த்தல்

அஃதாவது அளவுமிகத் தோன்ற அறிந்தனள் கிளந்த செவிலி கண்ணியனாய் வேலினோடு ஒருவன் எய்தலை யறிந்து நாண்மலர் அடியினைப் பணிந்தனன். இன்றும் பொருந்துதலைக் கண்ணுற்றனன். மயூரனுக்கு இந்த வில்லமும் அவன் கோயிலாம் போலுமெனக் கூறா நிற்றல்.

 காந்தளம் போது விராய்த்தொடு கூதளங் கண்ணியன்கை
 ஏந்தயில் வேலினன் முன்னொரு நாளிவ ணெய்தல்கண்டங்
 காய்ந்தலர் தூவி யடிதொழு தேனின்று மண்மல்கண்டேன்
 வாய்ந்ததன் மந்திர மோவிந்த வில்லு மயூரனுக்கே

(இ - ள்.) காந்தளினது அழகிய பேரரும்புகளால் விரவித் தொடுத்த கண்ணியினையுடையனாய் கையின்கண்ணே தாங்கிய கூர்மை பொருந்திய வேலுடையனாய் முன்னொருநாள் இவ்விடத்துப் பொருந்துதலைக் கண்ணுற்று ஆராய்ந்து மலர்களைத் தூவி வணங்கினேன். இன்றைக்கும் ஈண்டவன் பொருந்துதலைக் கண்ணுற்றனன். மயிலினையூர்ந்து செல்பவனாகிய இளைய பிள்ளையாருக்கு இந்த இல்லமும் (தான் பொருந்துதற்குரிய) கோவில் போலுமெனக் கூறாநின்றன ளென்க.

(வி - ம்.) காந்தட்போது விராய்த்தொடுத்த கூதளங்கண்ணியும் வேலும் முருகனுக்குரியவை யாகலான் "காந்தளம் போதுவிராய்த் தொடு கூதளங் கண்ணியன்கை; ஏந்தயில் வேலினன் முன்னொருநாள் அடிதொழுதேன்" என்றனள். மந்திரம் - கோயில். இந்த வில் - நங்குடியில். மயூரன் - முருகன். மெய்ப்பாடு : மருட்கை. பயன் : உற்ற துரைத்தல்.

(482)