பக்கம் எண் :

களவுப் படலம்1181

பசிய புனஞ்சூழ்ந்த வளவிய சாரலிற் கொண்ட வெப்பமாகிய நோயினைக் கட்டினாராய்ந்து துணியும் பொருட்டுச் சொல்லென்றன ளென்க.

(வி - ம்.) கட்டாவது தலைவி கொண்ட நோயின்ன காரணத்தாலுண்டாயதென வறியும் பொருட்டுச் செவிலி கட்டுவிச்சியினிடத்துக் கேட்ட வளவில் கட்டுவிச்சி முறத்தில் நெல்கொணரச் சொல்லி அந்நெல்லினைக் கையின் அள்ளி எண்ணித் தொகையைக் கணக்கிட்டுச் சொல்லுதலென்க. சொல்லாவது நென் மூன்றுமிரண்டு மொன்றும் படுகை. அஃதாவது அடியுங் கொடியும் உவகையுமாம். இதனுள் அடியாவது மயில். கொடியாவது கோழி. உவகையாவது வேல். இதனைத் திருக்கோவை 285ஆம் செய்யுளிற் காண்க. வில்லரிக்கண் - ஒளி பொருந்திய அரிபரந்த கண். கொல் அரி - கொல்லுகின்ற சிங்கம். அரிப்பன்றி - அழகிய பன்றி. அரி - அழகு. "அரிமயிர்த்திரண் முன்கை" யென்றவிடத்து மிப்பொருட்டாதல் காண்க. மெல்லியலாள் கொண்ட நோயினைக் கட்டினாற் துணிந்து சொல்வாயாக வென்க. பன்றியன்னாய் விளி. மெய்ப்பாடு : மருட்கை. பயன் : கட்டுவிச்சியை வினாதல்.

(484)

வேலனைக் கூய் வெறியாட் டெடுத்தல்

அஃதாவது காதலி விழுநோய் கட்டினிற் றெளிந்த செவிலி முருகன் பொருப்பைப் புனைந்துரைக்க இயலாததுபோலப் புனைந்துரைக்க இயலாத தலைவி விளையாட்டொழிந்துறங்கும் வண்ணம் செய்த நோயின் றுன்பினை எமக்கு வேலன் றெரிவித்தற் பொருட்டு யாம் அவனை வினாவித் தூவி இருத்திச் செய்யா நிற்ப. அவ்வேலன் புகுந்த விளைவு எந்தலை யெழுத்தாமெனக் கூறாநிற்றல்.

 பொறியாட் டெறுழ்தணித் தூர்ந்தோன் றணிகைப் பொருப்பனையாள்
 செறியாட் டொடுங்க வுறங்கிய செல்ல றெளிப்பவினாய்
 மறியாட் டுதிரம் விராய்ப்பலி தூய்வண் பிரப்பிருவி
 வெறியாட் டயர்கிற்ப வேலன் புகுந்த விளைவெமக்கே.

(இ - ள்.) ஆட்டுக்கிடாயின் வலியினைத் தணித்துச் செலுத்தினவ னாகிய முருகன் தணிகைமலையினை யொத்த தலைவி (ஆயங்களோடு) சேர்ந்த விளையாடலொடுங்க உறக்கமுற்ற துன்பத்தினைத் தெளிய வினாவி ஆட்டுமறியின் உதிரங்கலந்து பலியினைத் தூவி வளப்பம் பொருந்திய பேருண்டிகளை இருத்தி வெறியாட்டினைச் செய்ய வேன்மகன் புகுந்த விளைவு எந்தலையெழுத்தா மெனக் கூறினளென்க.

(வி - ம்.) செறியாட்டு - செறிந்த விளையாட்டு. இரத்தத்தோடு கூடிய பலியென்க. பிரப்பு - பேருண்டி. வேலன் - அணங்காடுபவன் (முருகன் அல்லன்) பொறி - விதி. அது தலையிலெழுத்து. "தாந்தாமுன் செய்த வினை தாமே யனுபவிப்பார், பூந்தாமரையோன் பொறிவழியே." என்ற அம்மையார் வாக்கானுமறிக. மெய்ப்பாடு : இளிவரல். பயன் : தலைமகளது வேறுபாடு நீக்கல்.

(485)

வெறியினை வெரீஇச் செறிகுழல் கிளத்தல்

அஃதாவது வேலனைக்கூய் வெறியாட்டெடுத்த செவிலியின் நிலைகண்டு தலைவி, தோழியே ! நம்மை வெளிப்படுத்திய காமநோய் இறை