பக்கம் எண் :

களவுப் படலம்1189

 பரிகொண்டு வாங்க லணைப்பரி பண்ணிய வேழநிலம்
 நெரிகொண்ட தேரு நெடுங்கடை வாய்த னிரைகொண்டவால்
 அரிகொண்ட வாட்கண்ணி மங்கலங் கூறி யடுப்பவென்றும்
 உரிகொண்ட வன்பினர் தாமிதற் கேது முணர்ந்திலரே.

(இ - ள்.) சுமத்தல் கொண்டு வாவிச் செல்கின்ற கல்லணைகளுடன் கூடிய குதிரைகள், புனைதல் செய்த யானைகள், நிலத்தினை நெரித்தல் கொண்ட தேர்கள் நீண்டவாயிற் கடைக்கண் வாட்படை போன்ற அரிபரந்த கண்ணினையுடையாள் மணங்கூறி நிரைகொண்டன. மணங்கூறி யடுத்தற்கென்றும் உரிமையினையுடைய அன்பினையுடைய தலைவர் தாம் (இதற்குக் காரணஞ்) சிறிதும் உணர்ந்தில ரென்க.

(வி - ம்.) காரணமாவது களவொழுக்கினை நீட்டித்து வரைதற்குச் சிறிதும் நினைவின்றி இருத்தல் என்க. உரிமை கொண்ட வென்பது விகாரம். பரி - வேகம், சுமத்தல். பண்ணல்-ஒப்பனை செய்தல். நிலம் நெரியும்படியான தேர் என்க. சிறைப்புறம் தலைவியையும் தோழியையும் தான் காணாமல் அவர் தன்னைக் காணத்தக்கதோர் பக்கத்தே நிற்றல் சிறை வேலியுமாம். மெய்ப்பாடு : பெருமிதம் சார்ந்த இளிவரல். பயன் : வரைவு கடாதல்.

(497)

அன்னை கேட்ப மின்னிடைக் குரைத்தல்

அஃதாவது சிறைப்புறத் தலைவற்குப் பிறர் வரைவுரைத்து வரைவு கடாய தோழி மின்னற்கொடி போன்ற தலைவியே ! நீ தெருவில் விளையாடச் செல்லும்பொழுது சிறு வீட்டையடுத்துச் சிறு சோற்றை இரந்து நிற்குங்கால் அவர் சொன்னதாவது பெரிய வீட்டையடுத்துச் சோறடுங் காலத்து அன்பினோடு உன் கையடுத்து எரியினை வலஞ் செய்வலென்று அன்பால் வருட்டியுரைத்த தலைவர் அயலார் வரைவு கருதிவர யாண்டையர் எனக் கூறாநிற்றல்.

 சிற்றி லடுத்துச் சிறுசோ றிரந்து தெருச்செலுங்கால்
 முற்றி லடுத்து முழுச்சோ றடுமன்றுன் முண்டகக்கை
 பற்றி னடுத்தெரி சூழ்வலென் றேபரி வான்வருட்டி
 எற்றி னுரைத்தவர் யாண்டைய ரேதில ரீண்டமின்னே.

(இ - ள்.) மின்னற்கொடி போன்ற இடையினையுடைய தலைவியே ! நீ தெருவினிடத்து விளையாடச் செல்கின்ற காலத்து உன்னையடுத்துச் சிறு சோற்றினை இரத்தல் செய்து நீ நிறைந்த பெரிய இல்லின்கட் பொருந்தி நல்ல சோற்றினை யடுகின்ற காலத்து உனது மரைமலர் போன்ற கையினை அன்பினோடடுத்து மணமயர்கின்ற காலத்து (வளர்த்தல் செய்யும்) எரியினைச் சுற்றி வலஞ் செய்வேனென்று வருடல் செய்து ஏற்றுதல் செய்துரைத்த தலைவர் இப்பொழுது (மணங்காரணமாக) நொதுமலர்கள் நெருங்கிவர யாண்டுச் சென்றன ரென்றன ளென்க.

(வி - ம்.) பெண்கள் சிறு வயதில் சிற்றிலும் தக்க பருவத்தில் முற்றிலும் பெறுவர் என்பார் "சிற்றிலடுத்துச் சிறுசோ றிரந்து தெருச் செலுங்கான் முற்றில் அடுத்து" என்றனர். உன் கையைப்பற்றி நம்