பக்கம் எண் :

களவுப் படலம்1191

 பிரிந்தா லரிதுயிர் வாழ்க்கை புடைபெய ராமுயக்கம்
 புரிந்தாலு மன்றி லெனக்கிள வாய்புது நித்திலங்கள்
 வரிந்தா லனைய முறுவற்செவ் வாய்மதர் வாள்விழியாய்
 தெரிந்தார் தமையுந் தெருட்டுதல் சான்ற தெளிவினர்க்கே.

(இ - ள்.) புதிய முத்துக்களைச் சித்திரித்தா லொத்த பல்லினையும் சிவந்த வாயினையும் செழித்த ஒளி பொருந்திய விழியினையுமுடைய தோழியே ! எல்லாக் கலையுங் கற்றுத்தெரிந்த பெரியார் தம்மையும் தெளிவித்தற்குத் தகுந்த அறிவின் றெளிவினையுடையார்க்கு அன்றிற் பறவைகள் ஆணும் பெண்ணும் பக்கலில் நீங்காத கூட்டத்தை விரும்பினும் (உடம்போடு கூடி) உயிர் வாழ்தல் (ஒன்றைவிட் டொன்று பிரியின்) அரிதாதல் போலத் தலைவியும் உன்னைப் பிரிந்தா லுயிர் வாழாள் எனக் கூறுவாய் என்றன ளென்க.

(வி - ம்.) துறை, பெற்றிமையை யுரையென்னல். அன்றில் புடை பெயரா முயக்கத்தைப் புரிந்தாலும் உயிர் வாழ்க்கை அரிதெனக் கொண்டு கூட்டுக. "கிளவாய் எனவே தலைவியும் உன் பிரிவால் உயிர் வாழாள் என்று சொல்லுக" என்பது குறிப்பெச்சம். இனித் தலைவனே நீ தலைவியினிடத்தில் புடைபெயரா முயக்கத்தைப் புரிந்தாலும் அவளை நீ பிரிந்தால் அன்றிலென அவளதுயிர் வாழ்க்கை அரிதாம் எனக் கிளவாய் என்பாருமுளர். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வரைவு கடாதல்.

(500)

நின்னின்றமையா ளென்றுரை யென்றல்

அஃதாவது பிரியின் வாழாப் பெற்றிமை தலைவற் குரையெனக் கிளந்த தலைவி நுண்ணிய கம்மத் தொழிலைத் தாங்கிய அணிகலன்களை யணிந்த தோழியே ! வேற்படையினையுடைய தலைவற்குக் குவளைக்கு நீரன்றியில்லை. உயிர்களுக்கு இறைவனையன்றி இல்லை. உடலினுக்கு உயிரையின்றி வேறு நலனில்லை. இங்ஙனமே தலைவிக்கு நின்கருணையன்றி வேறு நலமுள்ளது எதுவாகுமென வுரைப்பாயெனக் கூறாநிற்றல்.

 மதுவார் குவளைக்கு நீரன்றி யில்லைமன் னாருயிர்க்கு
 விதுவார் சடைப்பெரு மானன்றி யில்லை வினையுடற்குக்
 கதுவா ருயிரன்றி யில்லை நலநின் கருணையன்றி
 எதுவா மடக்கொடிக் கென்றுரை வேலவர்க் கேந்திழையே.

(இ - ள்.) நுண்டொழி லமைந்த அணிகலன்களை யணிந்த தோழியே ! வேற்படையினையுடைய நந்தலைவர்க்குத் தேனினையொழுக்குகின்ற குவளைக்கொடி நீரினையும் நிலைபெற்ற அரிய உயிர் சந்திரனை யணிசடையினோடு கூடிய பெருமையினையுடைய இறைவனையும் இரு வினைகளையும் இழைத்தற்குரிய உடல் (அவ்வுடலின்கட் பொருந்துகின்ற உயிரினையும் கொண்டன்றி நிலை பெறாததுபோலத் தலைவிக்கு நினது கருணையன்றி வேறு நலமேதாம். ஒன்றுமில்லை யென்றுரை யென்றன ளென்க.

(வி - ம்.) இல்லை யென்னும் பயனிலைகளுக்கு நலமென்பதை யெழுவாயாக்குக. அவைபோலத் தலைவிக்கு நினது கருணையன்றி வேறு