பக்கம் எண் :

1192தணிகைப் புராணம்

நலமுள்ளது எதுவாகும் என்க. ஆதலான் ஒன்றுமில்லை யென்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல்.

(501)

வந்தவர் மீளுமுன் வெந்துயர் தெரிக்கெனல்

அஃதாவது நின்னின்றமையா ளென்றுரையென்ற தலைவி தோழியே ஈண்டெழுந்தருளிய தலைவர் மீடற்குமுன்னர் நாமெய்திய வெந்துயரினைத் தெரிவிப்பாயெனக் கூறாநிற்றல்.

 வந்தவர் வாம்பரித் தேரின்று மீள வலித்ததில்லை
 நொந்தவர் நின்னடுத் தாருளில் லாநுதி வேற்கரவா
 பந்தவ மான பயோதரப் பாவை படர்மலிநோய்
 சிந்தவ ளாவெனிற் கேட்குவர் கொல்லோ திருந்திழையே.

(இ - ள்.) செயற்கை யழகு திருந்துதற் கேதுவாகிய அணிகலன்களை யணிந்த தோழியே ! ஈண்டெழுந்தருளிய தலைவர் தேர் இன்று மீடற்கு வலித்ததில்லையாம். (நின்னைத் துணையாக) அடுத்தாருள் வருத்தமுற்றவர் இல்லாத நுதியினையுடைய வேற்படையோடுகூடிய கையினையுடையாய். பந்தின் வனப்பு வீணாதற்கேதுவாகிய முலைகளையுடைய பாவைபோன்ற தலைவியின் துன்பநிறைந்த நோய்சிந்தும் வண்ணம் அவளோடு அளவளாவாய் எனக்கூறின் (அத்தலைவர் உன்னை ஏதாவது கேட்பாரோ) ஒன்றுங் கேளார் ஆதலான் நீ சொல்வாயாக வென்றன ளென்க.

(வி - ம்.) வலித்தல் - நினைத்தல். பயோதரம் - முலை. தன்னை யடுத்த மக்கள் துன்பினை நீக்கி யின்பளிப்பான் என்பார் "நின்னடுத் தாருள் நொந்தவரில்லா நுதிவேற் கரவா" என்றனர். ஆதலால் நீ யஞ்சாது சொல்லென்பது குறிப்பெச்சம். வளாவுதல் - கலத்தல். "கடல் வெதும்பிற் றன்மேல் வளாவ உண்டோ தரைமேலொரு தண்புனலே" என்றார் பிறரும் என்க. படர் - துன்பம். மெய்ப்பாடு : அழுகை சார்ந்த பெருமிதம். பயன் : வரைவு கடாதல்.

(502)

அன்னைக் குரையென நன்னுதல் கிளத்தல்

அஃதாவது வந்தவர் மீளுமுன் வெந்துயர் தெரிக்கெனக் கூறிய தலைவி தோழியே ! நினக்குண்மையாகச் சொல்வேன் அதனைக் கேட்பாயாக. தலைவன் வரித்து, செருகி, முகத்தை என் முலையில் வைத்து முத்தங் கொண்டு மீண்டனன். அதனை நீ அன்னைக்குச் சொல்லின் நவைவிரவாமற் சொல்லல் நன்றாமெனக் கூறாநிற்றல்.

 சூளுற் றுரைப்ப லெலுவி நினக்குத் தொடுகழலான்
 வாளுற்ற கண்மை வரித்துக் குழலின் மலர்செருகி
 மூளுற்ற வன்பின் முலைமுகம் வைத்து முழுவிமெல்ல
 மீளுற் றனனன்னைக் கோதி னவைவிர வாமைநன்றே.

(இ - ள்.) தோழியே ! நினக்குச் சரதமாகக் கூறுவேன். கட்டப்பட்ட வீரக்கழலினையுடைய தலைவன் வாள் போன்ற கண்களுக்கு மையினைத்