| வெப்பினைக் கெடுத்துத் தினையைக் காப்பாயோ எங்கண் முயற்சி யெல்லாங் கெட நடித்துத் திரிவாயோ யான் அறியே னெனக் கூறாநிற்றல். | | இடித்துத் தடித்துத் திசைதொறுங் கான்றிந் திரதிருவிற் | | | பிடித்துத் ததைந்த பெருமுகி லேபெருங் கோடைவெப்பு | | | முடித்துத் தினையளிப் பாய்கொன் முயற்சியெ லாந்தபுத | | | நடித்துத் திரிவைகொல் லோவறி யேனிந்த நாகத்திலே. |
(இ - ள்.) இடித்தலைச் செய்து மின்னற் கொடிகளையெல்லாம் திசைகளிலெல்லாம் கக்கி இந்திர திருவில்லினைப் பிடித்து நெருங்கிய பெரிய மேகமே ! இம்மலையின்கண் பெரிய கோடையாகிய வெப்பினை முடிவு செய்து தினைப்பயிரினைக் காப்பாயோ எங்கள் முயற்சியெல்லாங் கெட (பெய்தல்போல முழக்கஞ் செய்து) நடனஞ் செய்து திரிவாயோ யானறியேன் என்றன ளென்க. எனவே தலைவனே அலரைமாற்றி எங்களைத் துன்பத்தினின்றும் நீக்குவாயோ அல்லது நடித்து மீள்வாயோ வெனக் குறிப்புப்பொருள் தோன்ற நின்றது காண்க. நாகம் - மலை. தடித்து - மின்னல். கான்றல் - கக்கல். இந்திர திருவில் - வானவில். தபுத - கெட. மெய்ப்பாடு : பெருமிதம் சார்ந்த நகை. பயன் : குறிப்பான் வரைவு கடாதல். (510) நாட்டினை யுயர்த்தி வரைவு கடாதல் அஃதாவது மழைமேல் வைத்து வரைவு கடாய தோழி போர்த் தொழிற்குரிய தலைவனே ! யானைகள் பெண் யானைகட்குக் குளகினை யூட்டித் தானுமுண்டு உயர்ந்த நிழலின் கண்ணே செலுத்துவது நின்மலை நாடாதலால் ஒன்றினையுந் தெளியாதவன்போல நின் காதலியை இல்லில் இருத்தற்கியைந்திலை நின் அறிவென்னாமெனக் கூறாநிற்றல். | | ஒருத்தற் குலம்பிடிக் கூண்பல வூட்டியுண் டோங்குநிழற் | | | பொருத்தற் குகைப்பது நின்னகநா டெனிற் போர்த்தலைவா | | | வருத்தற் கெமையொன்றுந் தேற்றிலை போலவெம் மாதைநின்னில் | | | இருத்தற் கியைந்திலை யென்னறி வாங்கொ லிருநிலத்தே. |
(இ - ள்.) போர்த் தொழிலில் வல்ல தலைவனே, ஆண் யானைகள் பெண் யானைகட்குப் பலவித உணவினை யுண்பித்துத் தாங்களுமுண்டு நிழலின்கண்ணே சேர்த்தற்குச் செலுத்துவது நின்மலை நாடாதலால் எங்களை வருத்தற்கு, ஒன்றுந் தெரியாதவனைப்போல நினது இல்லின்கண் யாங்களிருத்தற்கு இயைந்தாயில்லை. இப்பெரிய நிலத்தின்கண் நின்னறிவு எத்தன்மையான அறிவோ யாமறிந்தில மென்றா ளென்க. (வி - ம்.) ஒருத்தல் - ஆண் யானை. உகைப்பது செலுத்துவது. நகநாடு - மலைநாடு. தேற்றிலை - தெளிந்தாயில்லை. தன்வினை. நின் இல் - நினது இல்லம். இயைந்திலை - உடன்பட்டாயில்லை. மெய்ப்பாடு : பெருமிதஞ்சார்ந்த நகை. பயன் : வரைவு கடாதல். (511) ஊரை யுயர்த்தி வரைவு கடாதல் அஃதாவது நாட்டினையுயர்த்தி வரைவுகடாய தோழி பறவையும் விலங்கும் புதிதுறுவோரும் ஏனையோரும் பசிநீங்கும் அதனால் இடர் நோய் |