பக்கம் எண் :

1198தணிகைப் புராணம்

விலங்குமென்று கருதி விழைகின்ற நலம் பொருந்திய மலையின் கண்ணுள்ள ஊரற்கு நல்லூழாற் செலுத்திய வுள்ளமானது விரைவிற் செல்லாது விலங்குமே யானாற் றகுதியின்றெனக் கூறாநிற்றல்.

 புள்ளும் விலங்கும் புதிதுறு வோரும் பொருந்துநரும்
 விள்ளும் விலங்கும் பசியிடர் நோயென வீழுநலம்
 தெள்ளும் விலங்குட் டிருந்திய வூரற்குச் செய்வினையின்
 தள்ளும் விலங்கு முளமெனின் மன்னோ தகவில்லையே.

(இ - ள்.) பறவைகளும் விலங்கினங்களும் புதிதாக வந்து பொருந்துகின்றவர்களும் ஏனையோர்களும் பசிப்பிணி நீங்கும் அதனால் துன்பினைத் தருகின்றநோய் நீங்குமென விரும்பப்படுகின்ற நன்மைகள் பொருந்திய மலையின்கண்ணுள்ள யாவரும் திருந்துதற் கேதுவாய செயலினையுடைய ஊரினையுடைய தலைவற்கு நல்வினையாற் செலுத்தப்பட்ட உள்ளமானது வரைவிற் செல்லாது விலங்குமேயானால் ஐயகோ தகுதியின் றென்க.

(வி - ம்.) புதிதுறுவோர் - வேற்று நிலத்திருந்து விருந்தாகப் புகுவோர். பொருந்துநர் - ஆண்டுள்ள குறிஞ்சிநில மாக்கள். பசிவிலங்கும் அதனால் இடர்நோய் விலங்குமென்று விழையப்படுகின்ற மலையென்க. வினையிற்றள்ளு முளம் விலங்குமெனக் கூட்டுக. மெய்ப்பாடு : பெருமிதஞ் சார்ந்த நகை. பயன் : வரைவு கடாதல்.

(512)

இல்லுங் குடியும் பிறப்புஞ் சிறப்பும்
இறப்பக் கூறி வரைவு கடாதல்

அஃதாவது ஊரினை உயர்த்தி வரைவு கடாய தோழி வேங்கையினை யும் பிறவற்றினையும் வினாய்வந்து தலைவியின் எழிலையும் வளையினையும் புறக்கணித்தாயாகிய நீ இன்னும் வரைதல் கருதாயானால் இத்தீங்கினையும் தலைவியின் இல்லினையும் குடியினையும் சிறப்பினையும் கருதில் உலகத்தில் சொன்னிகழ்ச்சியிலவாகிய ஊமையினையும் நிறைந்த வாக்கு வன்மையுடை யானையு மொக்கும் எனக் கூறாநிற்றல்.

 வேங்கையு மற்றும் வினாயிளை யாண்மெய் யெழிலும்வளை
 பூங்கையும் விள்ளப் புறக்கணித் தாயின்னும் போற்றிலையேல்
 தீங்கையு மில்லுங் குடியும் பிறப்புஞ் சிறப்புமெண்ணின்
 மூங்கையு முற்றிய வாக்கியு நேரு முதுநிலத்தே.

(இ - ள்.) வேங்கையினையும், மான் முதலிய ஏனைய கெடுதிகளையும் வினாவி இவரிளமைப் பருவமுடைய தலைவியின் அழகினையும் வளையினையும் மெய்யினின்றும் பொலிவுற்ற கையினின்றும் நீங்கும் வண்ணம் புறக்கணித்தல் செய்த நீ இன்றே வரையக் கருதாதிருப்பாயாயின் (அங்ஙனம் கருதாத) தீங்கினையும் அத்தலைவியின் இல்லினையும் குடிப் பிறப்பினையும் சிறப்பினையும் ஆராயப்புகின் சொன்னிகழ்ச்சி சிறிது மிலவாகிய ஊமையினையும் நிறைந்த வாக்குவன்மை உடையானையும் இப்பழைய நிலத்தின்கண்ணொக்கும் ஆதலின் இவ்விருவருங் கூடிய விடத்து சொன்னிகழ்ச்சியாலாம் பயன்பெறப் படாதவாறுபோல இவைகளிருந்தும் பயனில வென்றா ளென்க.