பக்கம் எண் :

களவுப் படலம்1203

யென்னு மணியினையும் கூந்தலின்கண் மெல்லிய பொன்னாலாகிய பெருமை பொருந்திய மலரினையும் அணிதல் செய்து இத்தலைவியின் அழகுக் கொத்த அழகினையுடைய மைந்தனைத் தலைவனாகக் கருதுவாயாக வென்றன ளென்க.

(வி - ம்.) பாடகம் - காலணி. நூபுரம் - சிலம்பு. பருமம் - மேகலையினொருவகை. சூடகம் - வளை. ஆடகம் - பொன். மாடகயாழ் - நால்வகையாழி னொருவகை. மஞ்சன் - மைந்தன். போலி. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : தோழிக் குடன்பாடு செவிலி யறிவித்தல்.

(520)

குஞ்சரங் கடிந்த குமரனை யன்றொரு
மஞ்சனு மில்லெனப் பாங்கி வலித்தல்

அஃதாவது அணிபடுத்தணங்கின் அழகினுக்கொத்த தலைவனை நாடென்ற செவிலிக்குத் தோழி தன்னால் அறியப்படும் பொருளொன்று மின்றி உலகத்துப் பொருளெல்லாவற்றையும் அறியும் அறிபொருளாகிய இறைவனை யொத்தவன் யானையைப் பிளந்த குமரனையல்லாமல் கூந்தலையுடைய செவிலியே தேவர்களுள் வைத்தும் இவளுக்குத் தலைவன் வேறொருவரும் இல்லையெனக்
கூறாநிற்றல்.

 அறியாப் பொருளின்றி யெல்லா மறியு மறிபொருள்சீர்
 பிறியாத் தணிகையில் வீராட்ட காசப் பெருந்தகைதன்
 குறியானு மொத்தவன் குஞ்சரங் கீழ்ந்த குமரனன்றி
 வெறியார் மலர்க்குழ லாயில்லை வேறுவிண் ணோருளுமே.

(இ - ள்.) வாசனை பொருந்திய மலரினையணிந்த கூந்தலினையுடைய தாயே ! (தன்னால்) அறியப்படாத பொருள் (உலகத்து) இல்லாமல் (உலகத்துள்ள நிலையியற் பொருள் இயங்கியற் பொருளாகிய) யாவற்றையும் அறியா நிற்கும் (உண்மை யறிவான் அறியா நிற்கும்) அறியப்படுகின்ற பொருளாகிய சிறப்பு நீங்காத தணிகைப் பதியின் கண்ணுள்ள வீராட்டகாச மென்னும் இடத்தி லெழுந்தருளிய பெரிய தகுதியினையுடைய இறைவனைத் தனக்குள்ள அடையாளங்களானும் ஒத்தவனாய் யானையைக் கடிந்த குமரனையன்றித் தேவருள் வைத்தும் வேறொருவர் இவளுக்குத் தலைவனாகத்தக்கார் இல்லையென்றா ளென்க.

(வி - ம்.) பொருளும் பெருந்தகையு மாய சிவனென்க. உலகின் கண்ணுள்ள பொருளை யெல்லாந் தானே யறிந்து அப்பொருள்களான் தான் அறியப்படாமையிற் சூனியமன்று உண்மை ஞானங்களாலறியப்படும் உண்மைப் பொருள் என்பார் "அறியாப் பொருளின்றி யெல்லா மறியு மறிபொருள்" என்றனர். இதனை "யாவையுஞ் சூனியஞ் சத்தெதிராகலின்" அசத்திலதாதலின் அறியாதென்ற "ஆகம வசனத்தானறிக. இறைவன் சுத்தம், சுகம், நித்தியமாகிய தன்மைகளைத் தனக்குரிய குறியாகக் கொண்டாற்போல இத்தலைவனும் சுத்தம், சுகம், நித்தியம் முதலிய குணங்களை யுடையானென்பார் வீராட்டகாசப் பெருந்தகை தன் குறியானு மொத்தவன்" என்றனர். குறி - அடையாளம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : செவிலிக் கறிவுறுத்தல்.

(521)