| றனள். செல்வி வெற்பனாகிய தலைவனிடத்துக் காதலினள் என்றிகழ்ந்து யாவரும் கூறும்மொழி விண்ணினும் மண்ணினும் அலராய் நிறைந்தன வென்பாள். "மொழி விண்பார் கொண்டன" என்றனள். நீ விரைந்து பொருள் கொணரின் அதுவே அவள் நோய்நீக்கு மருந்து என்பாள் "மருந்தோ கண்டதின்று" என்றனள். விரைவின் வரைந்து செல்வாய் என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : வரையுநாள் சுட்டி வரைவு கடாதல். (531) வரைவிடை வைத்துப் பொருள்வயிற் செல்வோன் ஓம்படைக் கிளவியிற் பாங்கிக் குணர்த்தல் அஃதாவது வரையுநாள் சுட்டி வரைவு கடாய தோழிக்கு மயிலினை யொப்பாளே அணங்கு அவலித்து நையாவண்ணம் ஆணவமலம் நீங்க வெளிப்படுகின்ற இறைவனருளால் பெரிய சுரத்தினைத்தாய்ச் சென்று பொருளீட்டிவந்து நும்மைக் காண்பேமெனக் கூறா நிற்றல். | | சுவலிற் றுயல்வரும் பூங்குழை வார்செவித் தோகைநல்லாய் | | | அவலித் தணங்குநை யாவகை தேறற்கன் றாணவநோய்த் | | | தவலிற் றலைவரும் வீராட்ட காசன் றனியருளால் | | | கவலைத் தடஞ்சுரந் தாய்ப்பொரு ளானும்மைக் காண்குதுமே. |
(இ - ள்.) தோளின் கட்டடவுதல் செய்கின்ற பொலிவுபெற்ற காதணியினையும் நீண்ட செவியினையுமுடைய சாயலான் மயிற்பெடையினை யொத்த நற்குணமுடையாளே ! தெய்வப் பெண்ணினை யொத்த தலைவி (என் பிரிவான்) அவலமடைந்து துன்பினை யடையாவண்ணம் தெளிதற்கு மாறுபாட்டினைக் கொண்ட ஆணவமலமாகிய நோய் நீக்கத்தின்கண் (எழுந்தருளுகின்ற வீராட்டகாசத்தின் கண்ணே) எழுந்தருளிய இறைவன் ஒப்பற்ற அருளான் கவர்த்த நெறியினையுடைய பெரிய சுரத்தினைக் கடந்து பொருளினை ஈட்டி அப்பொருளினோடு வந்து நுங்களைக் காண்பே மென்றனனென்க. (வி - ம்.) நல்லாய் அணங்கு நையாவண்ணம் தெளிதற்கு ஆணவ நோய் நீங்கு மமயத்துத் தோன்றும் இறைவனருளால் சுரந் தாய்ப் பொருளா னும்மைக் காண்குதுமென்க. சுவல் - தோள். அவலித்து - அவலம் அடைந்து. அன்று ஆணவம் - விரோதிக்கின்ற ஆணவமென வினைத் தொகையாகக் கொள்க. மலநீங்க இறைவன் காட்சியளிப்பான் என்பது தோன்ற. "ஆணவநோய் தவலிற்றலைவரு வீராட்டகாசன்" என்றனள். கவலை - கவர்த்தவழி. காண்குதும் - தன்மைப் பன்மை முற்று. ஓம்படை - பாதுகாவல். மெய்ப்பாடு : உவகை. பயன் : வரைவிடை வைத்துப் பிரிதல். (532) ஆற்றாத் தலைவியைத் தேற்றிச் செல்கென்றல் அஃதாவது வரைவிடை வைத்துப் பொருள்வயிற் செல்லுந் தலைவன் ஓம்படைக் கிளவியான் பாங்கிக்குணர்த்த அப்பாங்கி சிலம்பனே ! நீ கூறிய மொழிகள் யாவும் பொய்யென வறிந்தேம். நீ இன்ன நாளில் வருவேனென்று சொல்லிய அந்நாளின்கண் நீ வருதலின்றி வேறு காரணத்தால் தாழ்ப்பாயானால் கலுழ்பவளுக் குரைத்துச் செல்வாயெனக் கூறாநிற்றல். |