| | செவ்விய தீஞ்சொற் சிலம்பா நுவன்றவஞ் ஞான்றவைதாம் | | | அவ்விய மாத லறிந்தா மடுக்கு மமயமன்றிக் | | | கவ்விய வேறொரு காரணத் தாற்கணந் தாழ்த்துறினும் | | | நவ்விய வாட்கண் கலுழ்வாட் குரைத்து நடமதியே. |
(இ - ள்.) (பொருளமைதியுடன் கூடிய) செவ்விய இனிய சொற்களைச் சொல்கின்ற மலைநாடுடையானே நீ சொற்ற அக் காலத்துள்ள அச்சொற்கள் பொய்யாக யாம் அறிந்தனம். (இன்ன நாளில் வருவே னென்று நீ சொல்லி அந் நாளில்) பொருந்துங்காலம் மாறுபட்டுப் பொருந்தி வேறு காரணத்தான் கணப்பொழுது தாழ்த்து வருவையாயின் மானினையொத்த ஒளிபொருந்திய கண்கலுழ்கின்ற தலைவிக்கு நின்செலவைச் சொல்லிச் செல்வாயாக வென்றனளென்க. (வி - ம்.) அஞ்ஞான்று நுவன்ற அவை என மாற்றுக. அவ்வியம் - பொறாமை. கலுழ்தல் - அழுதல். அமையம் - காலம். கவ்விய - பொருந்திய. நவ்விய - அகரச் சாரியை. இதை "மின்னொழுகு சாயன் மிகுபூட்பதுமை கேள்வன், கொன்னொழுகு வேலியவ தத்தன் குளிர் தூங்குந் தன்வழிய காளைசிறி தத்தன னவன்றன்" என்னும் சிந்தாமணிச் செய்யுளானும் உரையானுமறிக. மெய்ப்பாடு : அச்சம். பயன் : வரை பொருட் பிரியுந் தலைமகன் ஆற்றுவித்தல். (533) ஆற்றாத் தலைவியைத் தேற்றுத லரிதாற் றாழ்க்கலன் வரைவெனப் போக்கொடு வலித்தல் அஃதாவது ஆற்றாத் தலைவியைத் தேற்றிச் செல்லென்ற பாங்கிக்குத் தலைவன் அன்னையி னீக்கத்தைச் சிறார்க்குரைத் தகலுதல் அரிதாகும். அவணீக்கத்து அடுத்த அயலார் நீக்க அமைவர். அதுபோல என்றலைவன் நீக்கத்தாலுய்யேன் என்பாளாயின் காரணம் யாது தலைவர் தம் நீக்கம் நீட்டியாதென்று கூறுவாயெனக் கூறாநிற்றல். | | அன்னைத னீக்கஞ் சிறார்க்குரைத் தாற்றி யகல்வரிதால் | | | அன்னைத னீக்கத் தடுத்தவ ராற்ற வமைவரன்றே | | | என்னைத னீக்கத்துய் யேனென்னு மாயி னியம்பும்வழி | | | என்னைத னீக்கநில் லாதெனத் தேற்றிங் கிளங்கிளியே. |
(இ - ள்.) கிளிமொழியன்ன வசனங்களையுடைய பாங்கியே தாய் தன் னீக்கத்தினைச் சிறுவர்கட்குரைத்து அவர்களை ஆற்றுதல் செய்து நீக்கலரிதாகும். அவணீங்கிய காலை அச்சிறாரை ஆண்டுப் பொருந்திய நட்பினர் தேறுதல் சொல்ல (அச்சிறார்) அமைதியடைவர். (அது போல) என்றலைவர் நீக்கத்தான் (யான் உயிர்தாங்கி) பிழையேனென்று (தலைவி) கூறுவளாயின் அங்ஙனஞ் சொல்லிய காலத்து நீ அங்ஙனம் சொல்வது யாது காரணம் தலைவன் நீக்கம் நீட்டியாதெனக் கூறுவாயாக வென்றனனென்க. (வி - ம்.) என்னுமாயின் - என்பாளாயின். என் ஐ முன்னது - என் தலைவன். பின்னுள்ள என்னை யென்பதனை என் என்பதை வினாவாக்கி, ஐ என்பதைத் தலைவனாகக் கொள்க. மெய்ப்பாடு : அச்சம். பயன் : தெளிவகப் படுத்தல். (534) |