பக்கம் எண் :

களவுப் படலம்1213

(வி - ம்.) கன்றால் விளவெறிகணை - விண்டு. இதனைப் "போக மீன்ற புண்ணிய னெய்த கணையேபோல்" என்னுஞ் சிந்தாமணிப் பகுதியான் அறிக. மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்கல்.

(536)

நன்னெறி விளைவதி னைந்துக லென்னென
வஞ்சி நுண்ணிடை நெஞ்சொடு கவறல்

அஃதாவது பிரிவினைக் கேட்டுப் பருவர லெய்திய தலைவி இறைவன் திருவடிபோல இன்பந்தரும் நெறி சுரம்போக் கென்று அறிந்திருந்தும் வருந்துகின்றனை நெஞ்சமேயெனக் கூறாநிற்றல்.

 முன்பந்த மாயவை யெய்தா முதல்வன் முழுத்தவுயிர்
 வன்பந்த மாய்த்தருள் வீராட்ட காசன் மலரடிபோற்
 றுன்பந் தடாச்சுடு வான்சுரம் போக்கென்றுந் தோல்விசெல்லா
 இன்பந் தரூஉநெறி யென்றாங் கறிந்து மினைதிநெஞ்சே.

(இ - ள்.) மனமே தோற்றமு மொடுக்கமுமாகிய இவையிற்றினைப் பொருந்தாத முதல்வன் அறிவு நிறைந்த ஆன்மாக்களுக்குள்ள வலிய ஆணவமலக் கட்டினை ஆரியனாக வெழுந்தருளி நீக்கி வீராட்ட காசத்தின்கண் எழுந்தருளி உள்ள இறைவன் றிருவடி போலத் துன்பினைச் செல்ல வொட்டாது தடுத்துச் சுடுகின்ற பெரிய சுரத்தின்கட் சேறல் எஞ்ஞான்று நீங்குதலில்லாத இன்பினைத் தருகின்ற வழியென வறிந்து வைத்தும் வருந்துவாய் என்றனளென்க.

(வி - ம்.) முன்பு - ஆதி. அந்தம் - முடிவு. முழுத்த வுயிர் ஆணவ மலத்தினோடு சம னிறைவுற்ற வுயிர். தலைவன் பொருளீட்டி வந்து தமர்கள் கருத்தினை முடித்துத் தலைவியை வரைந்து இன்பினை நுகர்தலின் "சுரம் போக்கென்றுந் தோல்வி செல்லா, இன்பந் தருநெறி யென்றாங் கறிந்தும்" என்றனள். துன்பந் தடாச்சுரம் - துன்பினைத் தடை செய்துவைத்துச் சுடுகின்ற சுரமென்க. மலரடிபோல இன்பந் தருநெறி சுரம் போக்கென இயைக்க. இனைதி - வருந்துகின்றாய். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்கல்.

(537)

வருத்த மிக்கவள் கருத்தழிந் துரைத்தல்

அஃதாவது நன்னெறி விளைவதின் நைந்துகலென்னென நெஞ்சொடு கவன்ற தலைவியானவள் தலைவர் வேலினோடு போந்து நிழலில் வஞ்சினமோதி வருட்டித் தெருட்டி மணந்தன வெல்லாம் நெஞ்சின் கண்ணுள்ளன. அக்காலத்துக் கரியாக ஒரு மயிலும் நின்றதுண்டு. அவர் வாய்மை துஞ்சினதானால் யான் செய்வேனெனக் கூறாநிற்றல்.

 வெஞ்சின வேலொடு போந்துமந் தார மிடைநிழலின்
 வஞ்சின மோதி வருட்டித் தெருட்டி மணந்ததெல்லாம்
 நெஞ்சின தேயன்று நீள்சிறை மஞ்ஞையு நின்றதுண்டு
 துஞ்சின தேலவர் வாய்மையென் செய்கோ சுடர்க்குழையே.

(இ - ள்.) ஒளிபொருந்திய காதணியை யுடையாளே ! வெவ்விய சீற்றத்தினையுடைய வேலினோடு போந்து செறிந்த மந்தார மரத்தின்