பக்கம் எண் :

1214தணிகைப் புராணம்

நிழலின்கண் (நின்னிற் பிரியேன் பிரியின் அறனல்லாதன செய்தேனு மாவேன் என) வஞ்சினங்களைக் கூறி வருடுதல் செய்து தெளிவித்துக் கூடிய யாவும் நெஞ்சின் கண்ணதே அக்காலத்து (சான்றாக) நீண்ட சிறையினையுடைய மயிற் பறவையும் நின்றதுண்டு (அங்ஙனங்கூறிய) அவர் வாய்மை கெடுமாயின் யான் யாது செய்வேன் என்றன ளென்க.

(வி - ம்.) அவர் வாய்மை துஞ்சினதேல் யான் என் செய்வேன் என்றன ளென்க. வஞ்சினம் - சரதம். மஞ்ஞை கரியாக நின்றதுண்டென்க. மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்கல்.

(538)

இயற்பழித் திகுளை வற்புறுத் தியது

அஃதாவது வருத்தமிக்குக் கருத்தழிந்து உரைத்த தலைவிக்கு வித்தினை முளையாக்கு முதன் மழை மெல்லிய பயிரினை யுளவாக்குஞ் செயலினை மறந்ததுபோல நல்லாய் ! நந்துன்பினை நீக்கக் கருதிய தலைவர் மீட்டுங் கருத்தினரல்லர் யாம் என் செய்வோமெனக் கூறாநிற்றல்.

 வித்தினை யாக்குந் தலைப்பெயன் மாமழை மென்பயிராம்
 அத்தினை யாக்கும் பெயன்மறந் தாங்கடு வேலரையர்
 முத்தினை வீழ்த்த முறுவனல் லாயென் மொழிதுமின்னற்
 கொத்தினை நீப்பக் குறித்தவர் மீட்டுங் குறித்திலரே.

(இ - ள்.) வித்தினைப் பயிராகச் செய்யும் முதற் பெயலையுடைய மேகம் மெல்லிய பயிராக மாறிய அதனை வளர்த்தற் கேதுவாகிய பின் பெயலினை மறந்து வாட்டமுறச் செய்தல்போலக் கொல்லுந் தொழிலினையுடைய வேற்படையினோடு கூடி நந்தலைவர் தம் (பிரிவான்) முத்தத்தின் அழகினைக் கீழாக்கிய முறுவலினையுடைய தலைவியே ! நம் மாட்டுளவாகிய இன்னற் கூட்டத்தினை முன்னர் நீக்கக் கருதிய தலைவர் மறுமுறையும் அதனை நீக்கக் கருதினாரின் றென்றன ளென்க.

(வி - ம்.) முதற் பெயன் நிலங்குளிர்ந்து அந்நிலத்தின்கட் கிடந்த வித்து முளைத்துப் பயிராய காலத்து அப்பெயல் பின் பெயலொழியின் அப்பயிரழியுமென்பாள் "முதற் பெயன் மாமழை பெயன் மறந்தாங்கு" என்றனள். முன்னர்ப் பிரிவான் உளவாம் நந்துன்பினை நீக்கியின்பினை யளித்த தலைவர். பின்னருந்துன்பினை நீங்க வரைந்துகொண்டு இன்பினை நுகராது பிரிந்தன ரென்பாள் "இன்னற் கொத்தினை நீக்கக் குறித்தவர் மீட்டுங் குறித்திலர்" என்றாள்.

தோழி தலைவன் இயலைப் பழித்துத் தலைவியே நீ யாற்றவேண்டு மென்று அவள் வழி யொழுகி வற்புறுத்தல். இதனை திருக்கோவை 275ஆம் திருப்பாட்டானும் உரையானு மறிக. மெய்ப்பாடு : அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன் : தலைமகளை யாற்றுவித்தல்.

(539)

வன்புறை யெதிரழிந் தாற்றா துரைத்தல்

அஃதாவது தலைவன் இயலினைப் பழித்து வழியொழுகி வற்புறுத்திய தோழியை நோக்கி தோழியே தொடலையைத் தோளிலணிந்து பின்னர்க் கூந்தலிற்றாரையணியுந் தொழிற்காகத் தன்றோளை நீக்குந்தோறும் அஞ்சும் பாவியாகிய எனக்குப் பலநாள் விட்டு அடுக்குந் தொழிலினைச் செய்த தெய்வம் அருளின் பகுதியையுடையதல்ல வெனக் கூறாநிற்றல்.