பக்கம் எண் :

1216தணிகைப் புராணம்

யும் காரணத்தான் யாமும் வரைவு முற்றுதற்கு ஏது அதுவாகலான் அதனை விழைந்தாம் எனக் கொள்ளினுமாம். மெய்ப்பாடு : இளிவரலைச் சார்ந்த பெருமிதம். பயன் : தலைமகளை யாற்றுவித்தல்.

(541)

மென்னடைக் காலவர் கன்னகந் தழுவியெம்
மெய்யிடை யுறினு முய்துமென் றியம்பல்

அஃதாவது ஆற்றாத் தலைவி தேற்றுமா றுரைத்த தோழிக்குத் தலைவி தொடியாய், அத்தலைவர் மலையின் கண்ணுள்ள சுனையில் மந்தாநிலம் தவழ்ந்து சுலாய் என் மெய்யிற்றோயின் பிழைத்தல் கூடுமெனக் கூறா நிற்றல்.

 மந்தா நிலமவர் வான்வரைப் பூஞ்சுனை வாய்த்தவழ்ந்து
 பைந்தா துகுக்கும் பரிமளச் சோலை பயின்றுசுலாய்ச்
 சிந்தா குலமுறுந் தீவினை யேன்மெய்த் திளைப்புறினும்
 கொந்தா ரொளிமணிக் கோற்றொடி யாயுய்தி கூடுமன்றே.

(இ - ள்.) ஒளியின் திரட்சியுடைய மணிகள் பதித்த திரண்டவளை யினை யணிந்த தோழியே ! அத்தலைவர் பெரிய மலையின் கண்ணுள்ள பூக்களையுடைய நீர்ச்சுனையிடத்துத் தென்றற் காற்றானது படிதல் செய்து பசிய மலர்ப்பொடிகளை யுதிராநிற்கும் நறுமணத்தையுடைய சோலையின்கண் பயின்று சுழலுதல் செய்து (அவர் பிரிவால்) மனத்தின்கண் வருத்த முறுகின்ற தீவினையுடைய எனது மெய்யின்கண் (அக்காற்றுத்) திளைக்கலுறின் யான் பிழைத்தல் கூடுமெனக் கூறாநின்றன ளென்க.

(வி - ம்.) கல்நகம் - மலை. மந்தாநிலம் - தென்றற்காற்று. சுலாய் - சுற்றுதல் செய்து. திளைத்தல் - ஈண்டு வீசுதல். மெய்ப்பாடு : அழுகை. பயன் : ஆற்றாமை நீங்கல்.

(542)

பருவங் கண்டு பருவர லுழத்தல்

அஃதாவது மென்னடைக் காலவர் கன்னகந் தழுவியெம் மெய் யிடையுறினு முய்துமென் றியம்பிய தலைவி அன்னையே ! மேகம் மிக்குக் கடலினை யுண்டு மழையினை மிக்குச் சொரிந்து வருவதுபோலும் அது வருமுன் அழற்றி உயிர்ப்போங்கத் திவலையைக் கண்ணிரப்புவது ஈதென்ன ஆச்சரியமெனக் கூறாநிற்றல்.

 கொண்டன் மிகுத்துக் குரைகடன் மேய்ந்து குளிர்மழையின்
 மண்டன் மிகுத்து வருவது போலும் வருமுனன்னாய்
 துண்ட மழற்றி நனியுயிர்ப் போங்கச் சுடுதிவலை
 விண்ட மலர்க்க ணிரப்புவ தீதென்ன விம்மிதமே.

(இ - ள்.) அன்னாய் ! மேகங்கள் மிக்குச்சென்று ஒலிக்கும் கடலின் கண்ணுள்ள நீரினையுண்டு குளிர்ந்த மழையை நெருங்கிப் பெய்ய மிகுதியுற்று வருவதுபோலும் அது வருதற்கு முன்னர் மூக்கினை (வெப்பத் தான்) வருத்தி மிகுதியாகப் பெருமூச்சானது மேலெழச் சுடுகின்ற நீர்த் துளியினை (அவர் பிரிவான் உறக்கமின்றிய) விரிந்த மலர்போன்றிருந்த கண் நிறைக்கின்றது. ஈதென்ன வாச்சரிய மென்றன ளென்க.