பக்கம் எண் :

களவுப் படலம்1217

(வி - ம்.) விண்ட மலர்க்கண் - விரிந்த மலர்போலும் கண். தலைவன் பிரிவால் உறக்கத்தினை நீத்த கண்ணென்பாள் கண்ணென்றொழியாது "விண்டமலர்க்கண்" என்றாள். பருவம் - ஈண்டுக் கார்காலம். கார்ப்பருவம் வருவதற்கு முன்னரே இச்செயல்கள் நிகழ்ந்தன வென்பாள் "வருமுன்னனாய், துண்ட மழற்றி நனியுயி ரோங்கச் சுடுதிவலை, விண்ட மலர்க்கண் ணிரப்புவ தீதென்ன விம்மிதமே." என்றனளென்க. துண்டம் - மூக்கு. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றாமை
நீங்கல்.

(543)

ஆயிடைத் தோழி யழிந்தியற் பழித்தல்

அஃதாவது பருவங்கண்டு பருவரலுழந்த தலைவியின் நிலைமை யறிந்த தோழி முலையினையுடையாய் ! நீ தன்னைக் காணுதலொழித்து நின்னைக் கவலையிற் றங்கச் செய்த காதலன் போன்று அவன் குன்றமும் மழையாகிய படத்தினைப் போர்த்து மறைந்ததெனக் கூறாநிற்றல்.

 காண்டலை மாற்றிக் கவலையிற் றாழ்த்திய காதலன்போல்
 வேண்டலை வேண்டுமன் னானெடுங் குன்றமும் வீடருநோய்
 தூண்டலை மேயதன் றேசுடர்ப் பூண்முலை யாய்முழுதும்
 மாண்டலை மேய்ந்த மழைப்படம் போர்த்து மறைந்ததுவே.

(இ - ள்.) சுடர்விடுகின்ற அணிகலன்களை யணிந்த முலையினை யுடைய தலைவியே ! (நீ தன்னைக்) காணுந்தொழிலினை நீக்கி நின்னைக் கவலையின்கட் டங்கச்செய்த காதலையுடைய தலைவனைப்போல நின்னால் விரும்புதலை வேண்டிய அவனது மலையும் (கடலின் கண்ணுள்ள) மாட்சிமையடைந்த அலைநீரையுண்ட மழையாகிய படத்தினைப் போர்த்து மறைதலைச் செய்தது அதுவே நீங்குதற்கரிய நோயினைத் தூண்டுதல் செய்தலைப் பொருந்தியது. இஃதென்ன (யாஞ்செய்த) தீவினையோ அறிந்திலமென்றன
ளென்க.

(வி - ம்.) தலைவன் நின் கண்ணறிவுக்குப் புலப்படாதவாறே போல அவன் மலையுமங்ஙனமாயிற்றென்பாள் "காதலன்போல" அன்னான் "நெடுங்குன்றமும் வீடருநோய் தூண்டலைமேய" தென்றனள். மாண்ட அலை - பெயரெச்சத்திறுதி தொக்கது. இதுவென்ன தீவினையோ அறிந்திலமென்பது சொல்லெச்சம். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : ஆற்றுவித்தல்.

(544)

அவன்றிற நோக்கிக் கவன்றனள் கிளத்தல்

அஃதாவது அழிந்தியற் பழித்த தோழி தலைவியை நோக்கி கௌவையும் அதனாலுளவாந் துன்பமும் சிந்தையும் அச்சத்தையுண் டாக்கினவோ நன்னெஞ்சினல்லாது இருட்காலத்தும் அடுத்தாரல்ல ரெனக் கூறாநிற்றல்.

 பெருகிய கௌவையுங் கௌவையி னாம்பெரி துங்கழுமுற்
 றுருகிய வெவ்வமு மவ்வினைக் கேத முறுநமர்தம்
 திருகிய சிந்தையுந் தீதிலர்க் கச்சஞ் செறித்தனவோ
 அருகியெ னெஞ்சி னலாதிருட் போது மடுக்கலரே.