பக்கம் எண் :

1218தணிகைப் புராணம்

(இ - ள்.) (ஊரின்கட்) பெருகிய பழிச்சொல்லும் அக்கௌவையினாம் பெரிதும் வருந்தியுள முருகுதலான் வருந்துன்பமும் (கௌவையுந் துன்பமுமாகிய இரண்டும் பொருந்தியதாகிய) தொழிலினுக்கு வருத்தமுறுகின்ற நம் தமருடைய மாறுபட்ட மனமும் தீதிலராகிய தலைவருக்கு அச்சத்தினை யுளவாக்கின போலும் வாட்ட முறுகின்ற என்னெஞ்சி னல்லாமல் இருட் காலத்தும் இவண் வந்தனரல்லர் என்றா ளென்க.

(வி - ம்.) தலைவனானவன் தன்னாற் றலைவிக்குப் பழிச்சொல்லும் துன்பமும் உளவாதலானும் கொடியாராகிய வேடர் அவ்விரண்டனையு மறிந்தன ராகையானும் நான் செல்லின் என்னை வருத்துவராகலானும் செல்லாமையே நன்றெனவஞ்சி இவண் வாராதொழிந்தனன் என்பாள் "நமர்தந் திருகிய சிந்தையுந் தீதிலர்க் கச்சஞ் செறித்தனவோ" என்றனள். பகல் இராவாகிய இருகாலத்தும் என்னெஞ்சின் மாத்திரம் நீங்காது தங்கியிருக்கின்றனரேயன்றி வாரல் செய்யா தொழிந்தனர் என்பாள் "நெஞ்சினலாது இருட்போது மடுக்கலர்" என்றனள். உம்மையாற் பகலினும் இவண் வாராதொழிந்தன ரென்பது தோன்ற நின்றது. பகற்கண் வருதலைப் பலரும் அறிதலான் வெளிப்படையாம் என்றஞ்சினாலும் இரவினானும் வாரலாகாதோ வென்பாள் "இருட்போது மடுக்கலர்" என்றனள். மெய்ப்பாடு : அச்சஞ்சார்ந்த மருட்கை. பயன் : தலைமகள் நெஞ்சொடு சொல்லி ஆற்றுதல்.

(545)

பொய்த்தது சூளெனப் புகன்றியற் பழித்தல்

அஃதாவது அவன்றிறம் நோக்கிக் கவன்றனள் கிளந்த தலைவியை நோக்கித் தோழி! நந்தலைவர் நம்மாட்டு வெறுத்து இயல்பல்லாதன இனிச் செய்யவேண்டுவது மேலென்ன இருக்கிறது. வஞ்சினம் பொய்த்தது; அதனை விளக்குவதுபோலக் கையின்கண் வளைகள் நில்லா. நெடுங்கண்கள் தரளநிரையை மறுத்தியலா. நெட்டுயிர்ப்பு அடுத்தோரை வருத்துவதெனக் கூறாநிற்றல்.

 வெறுத்தியல் பல்லன மேலெவன் செய்வது வேண்டுமன்னாய்
 உறுத்திய வஞ்சினம் பொய்த்ததன் றேயுது தேற்றுவபோல்
 நிறுத்திய கைவளை நில்லா தரள நிரைநெடுங்கண்
 மறுத்திய லாநெட் டுயிர்ப்படுத் தோரை வருத்துவதே.

(இ - ள்.) அன்னையே! (நந்தலைவர்) வெறுத்தல் செய்து இயல்பல்லாத காரியம் இனிச் செய்ய வேண்டுவது யாதுளது. (தலைவன் யான் இன்ன நாளில் வருவேனென வரையறுத்து) வற்புறுத்திச் சொல்லிய வஞ்சினமும் பொய்த்ததன்றே. அங்ஙனம் வஞ்சினம் பொய்த்தலைத் தெளிவிப்பனபோலக் கையின்கண் (அவரான்) நிறுத்தப்பெற்ற வளைகளும் நில்லா. நெடிய கண்கள் முத்தினைப்போன்ற நீர்த்துளிகளைத் தடுத்துநில்லா. அடுத்தவர்களைப் பெருமூச்சானது வருத்துவது; ஆதலான் நாஞ்செய்யக் கடவதென்னென வருந்தின ளென்க.

(வி - ம்.) வஞ்சினம் பொய்த்தல் இன்னநாளில் வருவேனெனத் தலைவன் வரையறுத்து நிறுத்தியநாளில் வாராதொழிதல். அங்ஙனம் குறித்த நாளில் வாராமை கருதிக் கைவளை முதலிய கழலுதலை நோக்கியும் கண்கள் நீர்பொழிதலை நோக்கியும் "வஞ்சினம் பொய்த்ததன்றேயுது தோற்றுவபோல் நிறுத்திய கைவளை நில்லா தரள நிரைநெடுங்கண் மறுத்தியலா வென்றனள்.