பக்கம் எண் :

களவுப் படலம்1219

பிரிவச்சத்தான் வெப்பமுற்று பெருமூச்செறிவாள் என்பாள் "நெட்டுயிர்ப்படுத் தோரை வருத்துவதே" என்றனள். தரளநிரை - முத்துப்போன்ற கண்ணீர்த்துளிகள். மறுத்தியலா - தடைசெய்து பொருந்தா. மெய்ப்பாடு : அச்சத்தைச்சார்ந்த மருட்கை. பயன் : ஆற்றுதல்.

(546)

வஞ்சினங் காவலராயினுங் காவலின்
எஞ்சல ரெமக்கென வியற்பட மொழிதல்

அஃதாவது சூழ்பொய்த்தன னென்று புகன்று இயற்பழித்த தோழியை நோக்கித் தலைவி பேய்ப்பெண்டிரும் சிங்கமும் முதலியன தாமீன்ற மழவினை விரும்பி வளர்த்தல் செய்கின்றனவன்றோ? முழங்கையினை அணைமே லூன்றி அகங்கையினை முடிக்களிக்கும் நந்தலைவர் நான் உயிர்நீங்கக் காவாதிருப்பினும் காத்தலையுடையவ ராவரெனக் கூறாநிற்றல்.

 அழத்தினை வேட்டுணும் பெண்டீர்வல் சீயமுன் னானவுந்தம்
 மழத்தினை வேட்டு வளர்ப்பன வேமதர் வாட்கணல்லாய்
 முழத்தினை மெல்லணை யூன்றி யகங்கை முடிக்களிப்போன்
 இழத்திய வென்னுயிர் காவல னீடினுங் காவலனே.

(இ - ள்.) மதர்த்த வாளினையொத்த கண்ணினையுடைய நல்லாளாகிய தோழியே பிணத்தினை விரும்பியுண்ணுகின்ற பேய்ப்பெண்டிரும் வலியினையுடைய சிங்க முதலியவைகளும் தாங்களீன்ற குழவிகளை விரும்பி வளர்ப்பனவாதலான் முழங்கையினை மெல்லிய அணையின் கண்ணேயூன்றி அகங்கையினைத் தலையைத் தாங்கற்குக் கொடுப்போனாகிய நந்தலைவன் என்னுயிரை யான் இழக்கக் காவாது நீட்டிப்பினும் காத்தல் செய்பவனே யாவனெனக் கூறினள் என்க.

(வி - ம்.) பெண்டீர், சீயம் முதலியன மழவை வளர்ப்பன எனத் திணைவிரவி இழிபால் அஃறிணை முடிபேற்றன. பிணந்தின் பெண்டிரும் சீய முதலியனவும் வளர்ப்பனவாதலான் முழங்கையினை ஊன்றி அகங்கையினைத் தலைக்களிக்கும் கருணையுடையான் காவாது நீட்டிப்பினும் காத்தலையுடையனாவான் என்பாள் "முழத்தினை மெல்லணை யூன்றி யகங்கை முடிக்களிப்போ ணிழத்திய என்னுயிர் காவலனீடினுங் காவலனே" என்றனள். மழவு - சிறுபேய். சிங்கக்குட்டி முதலியன. அழம் - பிணம். என்னுயிரிழக்கக் காவாதிருந்தவன் கால நீட்டிப்பினும் காப்பவனே யாவன் என்பது கருத்து. காவலன் என்பததற்கு கா பகுதி. அன் : விகுதி. அல் : எதிர்மறை இடைநிலை. பின்னருள்ள காவலனென்பதனை காத்தற்றொழிலில் வல்லவன் எனப் பிரித்துப் பொருள் கொள்க. வஞ்சினம் பொய்த்துக் காவானென்று நீ யியற்பழித்தாலும் அவன் என்னுயிர்காப்பான் என்பாள் "காவலனீடினுங் காவலனே" என்றனள். இழத்திய - இழக்க. மெய்ப்பாடு : அச்சஞ்சார்ந்த மருட்கை. பயன் : ஆற்றாமை நீங்கல்.

(547)

கவினழி வுரைத்துக் காதலி யுயங்கல்

அஃதாவது வஞ்சினங் காவலராயினுங் காவலி னெஞ்சல ரெமக்கென வியற்பட மொழிந்த தலைவி அரையனால் நீக்கப்பட்டாரை அவர்