பக்கம் எண் :

1220தணிகைப் புராணம்

நட்பினருந்தழுவாமையைத் தெரிப்பன போலத் தலைவர் நீங்கினாரென வனப்பும் வளையும் நீங்கின. என்னெஞ்சும் என்னைப் புறக்கணித்துப் போயிற்றெனக் கூறாநிற்றல்.

 வேந்தரி னால்விடுக் கப்படு வாரை விரசுநரும்
 தாந்தழு வாமை விளக்குவ போற்றணந் தாரெனவென்
 மாந்தளிர் மேனி வனப்புமென் றோளின் வரிவளையும்
 போந்தன போயிற் றவர்புற நெஞ்சும் புறக்கணித்தே.

(இ - ள்.) அரசரான் (தங்குழுவினின்றும்) நீக்கப்பட்டவர்களைத் தம்மொடு கலந்த நட்டாரும் தழுவாமையை விளக்குவபோன்று (தலைவர் என்னின்) நீங்கினாரென்று மாவின்றளிரினை யொத்த என் உடல் வனப்பும் மெல்லிய தோள்களின் கண்ணுள்ள கீற்றினையுடைய வளைகளும் என்னினின்றும் நீங்கின. என் மனமும் என்னைப் புறக்கணித்தல் செய்து அவரிடத்திற் சென்றது. யான் என் செய்வேனென்றன ளென்க.

(வி - ம்.) விரசுநர் - சுற்றத்தாரெனினுமாம். தணத்தல் - நீங்கல். வனப்பும் வளையும் போயின. அவை போனதன்றி நெஞ்சு என்னையும் புறக்கணித்துப் போயிற் றென்க. ஆதலான் நான் என் செய்கேன் என்பது குறிப்பெச்சம். மெய்ப்பாடு : அச்சஞ்சார்ந்த மருட்கை. பயன் : ஆற்றாமை நீங்கல்.

(548)

போற்றுவ ரின்னே ஆற்றெனக் கிளத்தல்

அஃதாவது கவினழிவுரைத்துக் காதலி யுயங்கல் கண்டு தோழி காகம் வருவரெனக் கரைந்தது. கணிகள் இன்றும்மைக் காண்பரென வரையறுத்துச் சொல்லினர். தேர் வருகின்றது முற்பகலோ பிற்பகலோ மேகம் முழங்கிற்றென்று கருதும்படி முழக்கத்தோடு தலைவர் வருவர் எனக் கூறாநிற்றல்.

 கரைந்தது காகங் கலைகள்வல் லாரின்று காண்பரென
 வரைந்தனர் வாம்பரித் தேர்வரை வோடும் வருகின்றதே
 விரைந்தது பால்கதி ருச்சியி னோடகல் வீழ்பதத்தோ
 இரைந்தது மேகங்கொ லாமென வார்ப்பொடு மெய்துவரே.

(இ - ள்.) (தலைவர் நம்மாட்டு வரும் நல்லூழுக் கறிகுறியாக) காகம் கரைந்தது. கணிதநூலில் வல்ல கணிகள் (தலைவர்) இன்று நுங்களை வந்து காண்பரென நிச்சயித்தனர். தேரானது வரைவினோடு வாராநின்றது. (தலைவரோடு நாம் கூடும் தன்மைத்தாகிய) நல்லூழும் விரைந்து வந்தது. சூரியன் இயங்கும் உச்சிக்காலத்தோ அவன் வீழ்ந்த மாலைக்காலத்தோ மேகம் இரைந்ததென்று சொல்லும் வண்ணம் முழக்கத்தோடு தலைவர் வருவா ரென்றன ளென்க.

(வி - ம்.) கதிருச்சியினோ பகல் வீழ்பதத்தோ வென்பதற்கு இரவிலோ பகலிலோ எய்துவர் எனக் கூறுவாருமுளர். கரைதல் - காக்கை கூப்பிடுதல். பால் - ஊழ். வரைதல் - நிச்சயித்தல். கணி - சோதிடர். பகல் - சூரியன். மெய்ப்பாடு : அச்சஞ்சார்ந்த பெருமிதம். பயன் : ஆற்றியிருத்தல்.

(549)