பக்கம் எண் :

1224தணிகைப் புராணம்

தெரிவியாநிற்ப முன்னரன்பினாற் கலந்தீர் முன்னரந்நிலைமை பொருந்திய நின்மாட்டும் அவர்க்கும் வருத்தமுறாதோ. தலைவியே தமக்குத் துன்பினை எவர்தாமுளவாக விரும்புவர் ஆதலின் வருந்தாதொழிவாயாக வெனக் கூறாநிற்றல்.

 விழியே யுளமிரு வீர்க்குந் தெரிப்பவிள் ளாதவன்பின்
 வழியே கலந்தனிர் முன்னரந் நீர்மை மருவியநின்
 உழியேய் வருத்த முறாதோ வவர்க்கு மொளிநகையாய்
 அழியேல் வருத்தந் தமக்கெவ ராக வவாவுநரே.

(இ - ள்.) ஒளிபொருந்திய பல்வரிசையினையுடைய தலைவியே நுங்களிருவர்க்கு முள்ளத்தின்கண்ணுள்ள வன்பினை விழியே தெரித்தலைச் செய்ய (எக்காலத்தும்) நீங்காத வன்பின்வழியானே முன்னர்க் கலந்தனிர் இருவரும் முற்காலத்து அந்நீர்மையினோடு பொருந்திய நின்னிடத்துப் பொருந்திய வருத்தம் அத்தலைவர்க்கும் பொருந்தாதோ. பொருந்தியே யிருக்கும்; ஆதலான் யாவர்தாம் வருத்தத்தினைத் தமக்குத் தாமே உளவாக விரும்புவ ரென்றா ளென்க.

(வி - ம்.) துறை : குறிப்பினாற் குறிப்பு நெறிப்படத் தோற்றி, உள்ளக் கருத்தை நோக்கத்தாலறியும் குறிப்பறிதலென முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சி. உள்ளக் கருத்தினை விழிதெரிவிப்ப முன்னர் அன்பினோடு கலந்தீர். அத்தலைவர்க்கு முறாதோ வென்க. எவர் தமக்கு வருத்தம் ஆக அவாவுநர் ஒருவரும் அவாவார் என்க. ஆக - உண்டாக குறிப்பிற் குறிப்பு என்பதற்கு குறிப்பாலறியும் குறிப்பு என்பர். மெய்ப்பாடு : அச்சஞ்சார்ந்த பெருமிதம். பயன் - ஆற்றுவித்தல்.

(555)

வரைந்த நாண்முன் விரைந்தன ரறிகென
தாழ்குழற் றலைவிக்குத் தோழி கிளத்தல்

அஃதாவது குறிப்பிற் குறிப்பு நெறிப்படத் தோற்றிக் கயற்புரை கண்ணிக் கியற்படமொழிந்த தோழி, தலைவியே! உலகினைப் புரப்பவர் தெய்வம் பராய்ப் பயிரினை வளர்க்கக் காரணி கொள்ள அதனைக் கண்டு பருவமென்று மயங்கினாம் அவர் வரையறுத்த நாண்வரு முன்னரே மணியொலி கேட்கின்றது. சென்றவர் அண்மினரெனக் கூறாநிற்றல்.

 தாரணி தாங்குநர் தெய்வம்ப ராய்ப்பயிர் தான்வளர்ப்பக்
 காரணி வாய்ப்பப் பருவமென் றேமுன் கலங்கினமால்
 வாரணி பூண்முலை யாய்சொற்ற நாள்வரு முன்னரிதோ
 தேரணி நாமணி யார்க்கின்ற தண்மினர் சென்றவரே.

(இ - ள்.) கச்சினை யணிந்த தனத்தினையுடைய தலைவியே! தரணியைத் தாங்குநர் தெய்வத்தை வணங்கிப் பயிரினை வளர்த்தற்காகக் காரானது வேனிலின்கண் அழகுவாய்ப்ப (நீயும் நானும்) அதனைநோக்கிக் கார்ப்பருவமென்று நினைத்துக் கலங்கினோம் அவர் இன்னநாளில் வருவேனெனச் சொல்லிய நாள் வருதற்கு முன்னரே, அவர் தேரிலணிந்த மணி நாவானது ஒலிக்கின்றது. (பொருடேடப் பிரிந்த) சென்ற தலைவ ரண்மினர் இஃதரிதென்றன ளென்க.