பக்கம் எண் :

1228தணிகைப் புராணம்

எக்காலத்தும் குறையுளதாவது போன்று பேரண்டத்தின்கண் இடைவெளி சிறிதுமின்றிச் செழுமையுடைய பொன்னை நிரப்பி, இதனை ஏற்றுக்கொண்டு அந்த அழகியை எமக்குத் தருக என்று கூறினும் பின்னரும் நங்குறவர்பால் குறையிருப்பது இயல்பேயாம்.

(வி - ம்.) அடைச்சி - நிரப்பி. மண்டுதல் - செல்லுதல். இருட் கண்டத்தவர் - சிவபெருமான். தனக்குவமையில்லான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது என்பதுபற்றி, இருட்கண்டத்தவரைக் கருதாதவர் ஈண்டு உவமையாயினர்.

(562)

கண்ணிய தழிய அண்ண னெஞ்சழிதல்
(தலைவன் தன்னெஞ்சிற்குக் கூறுதல்)

 இன்னும் பொருள்சென் றிறுத்தன மேனு மிவர்விழைவு
 மன்னும் பெருகுவ தன்றே யதனான் வருவதென்னே
 கொன்னும் பரமனை வீராட்ட காசத்தெங் கொற்றவனை
 உன்னும் புரவறி யாரினெஞ் சேயின் றுயங்குதுமே.

(இ - ள்.) பரமசிவனாகிய வீராட்டகாசத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனைக் கருதுகின்ற பாதுகாவலை அறியாதார் வருந்துதல் போன்று நெஞ்சமே! இன்றுயாம் வருந்த நேர்ந்துவிட்டது. பின்னரும் சென்று நிரம்பப் பொருளைக் கொடுத்தேமாயினும் இவருடைய அவா மிகவும் பெருகுவ தொன்றாயிருந்த தன்றோ! அச்செயலால் இனி நமக்குண்டாம் பயன் யாது?

(வி - ம்.) மன் - மிகுதிப்பொருட்டு. கொன் - பெருமை ; அசையுமாம். புரவு - பாதுகாவல்.

(563)

தளர்வு கண்ட விளிமொழித் தோழி
யுடன்கொடு போதுங் கடன்மதித் துரைத்தல்
(தோழி தலைவனுக்குக் கூறியது)

 மன்றலை வேட்டு வருந்திய பாவை வதுவைவினை
 நின்றது கேட்டலு நெட்டுயிர்த் தாளந் நிலையின்மன்னா
 இன்றவ ராகத் தணைந்தில மென்றெனைப் பார்த்துமுன்போற்
 சென்றன ளாயநல் லார்வண்ட லாடுஞ் செயலிடத்தே.

(இ - ள்.) வேந்தே! திருமணத்தை விரும்பிப் பெரிதும் வருந்திய தலைவி அத்திருமணவினை நின்றுவிட்ட செய்தியைக் கேட்டவளவின் நெடிதாக மூச்செறிந்தாள். அங்ஙனம் மூச்செறிந்து வருந்தியவள் என்னை நோக்கி இன்று யாம் அவருடைய மார்பிலே முயங்கினோமில்லை என்று தோழியர் கூட்டத்தை நோக்கிப் பண்டுபோன்று விளையாட்டை மேற்கொண்டு சென்றாள்.

(வி - ம்.) மன்றல் - மணம். பாவை - தலைவி. மன்னா - விளி. நின்னைக்காண வந்தவள். நின்பால் என்னை ஏவித் தான் தோழியர் கூட்டத்தே சென்றாள் என்றவாறு. நின் குறிப்பினையறிவது தலைவி கருத் தென்றபடியாம்.

(564)