| (இ - ள்.) ஒன்றாகிய பொன்றேரினை ஊர்தியாக வுடைய ஞாயிற்றுத் தேவன் தோன்றாநின்ற விடியற்காலத்திலேயே கற்றையான பின்னிய கூந்தலையுடைய பெருமாட்டியே! ஈண்டு அலர் தூற்றுங்கயமாக்கள் வாயை அடைத்துவிட்டு இற்றை நாள்மட்டும் யான் ஈண்டுத் தங்கியிருந்து வானவர் வணங்கும் திருத்தணிகையின்கண் மறுநாள் வந்து நின்னைக் காண்பல், நீ முன்சென்று வாழ்வாயாக. (வி - ம்.) பொலம் - பொன். சகடு - தேர். வெய்யோன் - ஞாயிறு. வாயடைத்தல் - இடித்துரைத்தல். (579) வெறிமலர்த் தாரோ னெறிவயி னுய்த்தல் (தலைவன் தலைவிக்குக் கூறியது) | | செம்பஞ் சிரும்பகை யென்றணி யாதசெஞ் சீறடியும் | | | வம்பஞ் சியமுலைக் கேபகை யான மருங்குலுங்கூர் | | | அம்பஞ் சியபர லாரத ரூடழி யாதுபையக் | | | கொம்பஞ் சியவெழிற் கோமள மேகொண்டு செல்லியரே. |
(இ - ள்.) பூங்கொம்பு அஞ்சுதற்குக் காரணமான பேரழகையுடைய இளைமையோய் நினது, செம்பஞ்சுக் குழம்பினையும் வருத்தா நின்ற பெரிய பகை யென்று கருதி அணியப்படாத மெல்லிய சிற்றடியும் கச்சு அஞ்சுதற்குக் காரணமான பரிய முலைகட்கே பகையாகி அஞ்சும் இடையும், கூர்த்த அம்புபோன்ற பருக்கைக் கற்கள் நிரம்பிய அரிய இந்த வழியினூடே வருந்தாமைப் பொருட்டு மெல்லென்ற நடையை மேற்கொண்டு நடந்திடுக. (வி - ம்.) வம்பு - கச்சு. அது தன்னைக் கிழிக்குமென்றஞ்சிற்றென்க. மருங்குல் - இடை. அதர் - வழி. செல்லியர் : வியங்கோள். (580) முன்ன மறிந்து மன்னவன் கிளத்தல் (முன்னம் - குறிப்பு. மன்னவன் - தலைவன்) | | கயவர் கஞலும்வெங் கானகத் தேகடித் தொண்டகநல் | | | இயவர் தொடர்வதற் கேதுமஞ் சேலஞ்ச லேந்திழையாய் | | | வியவ ரெனத்தொடர் வுற்றுவிண் ணோரும் விரசுவரேல் | | | வயவ ரெனவெவ ரேயென்கை வேன்முன் வருகுநரே. |
(இ - ள்.) உயரிய அணிகலன்களையுடையோய்! தீவினைமாக்கள் செறிந்த இக்காட்டின்கண் அச்சமுண்டாக்கும் நல்ல தொண்டகப் பறை யினையுடைய குன்றவர் நம்மைத் தொடர்ந்து வருவரோ என்று சிறிதும் அஞ்சாதே கொள்! அஞ்சாதே கொள், என்னைக் கண்டுழி வானோரும் பணியாளராக வந்து சூழ்வாராகவும் என் கைவேல் முன்னர் வீரர் என வருவோர் யாரேவுளர். (வி - ம்.) கடி - அச்சம். தொண்டகம் - குறிஞ்சிப்பறை. இயவர் -இசைக் கருவியினை யுடையோர். இயவர் என்றது வள்ளியின் தமரை. வியவர் - ஏவலர். வயவர் - வீரர். (581) |