பக்கம் எண் :

1238தணிகைப் புராணம்

பிறிதோரிடமுமில்லை. எமது வேண்டுகோட் கிணங்கி ஈண்டுச் சிறிது பொழுது தங்கிப் போவீராக ; எம்மொடு வாருங்கள்.

(வி - ம்.) வெய்யவரே : விளி. உருப்பான் - சுடுவான். இவட்கு இயல் மெல்லியது என்க. குரம்பை - குடில்.

(586)

இளமலர்க்காவும் அளிமலர்ப் பொய்கையும்
வளவிய சூழலின் மாதினை யிருத்தல்
(தலைவன் தலைவிக்குக் கூறியது)

 அடுத்தனஞ் சீபரி பூரண வோங்க லணிமையுற
 விடுத்தன மாரழற் கானெமி யாய்த்தமி மேவலின்றாப்
 படுத்தனம் பாய்மணி மேகலை யல்குல்பன் மாமலர்கள்
 தொடுத்தனஞ் சூழ்ந்துசெல் வாம்வைகுவா மிந்தச்சூழ்பொழிலே.

(இ - ள்.) மணிகளிழைத்த மேகலையணிந்த அல்குலையுடையோய்! யாம் இப்பொழுது நிரம்பிய வெப்பமுடைய பாலைக்கானத்தைக் கடந்து திருத்தணிகை மலை அணித்தாம்படி வந்துள்ளேம். எம்மவளே! இனியாம் தனியே செல்லுதலின்றி இந்த மரஞ்சூழ்ந்த பொழிலின்கண் தூங்கிச் சிறந்த மலர்களைப் பாயலாகப் பரப்புவேம். அவற்றைத் தொடுப்பேம். இங்ஙனம் இருந்து இளைப்பாறிச் செல்வேம்.

(வி - ம்.) சீபரிபூரண வோங்கல் - தணிகைமலை.

(587)

நடையயர் வுயிர்த்தலி னம்பி வேளைம்
படையயர் வுயிர்க்கும் பான்மைகட் டுரைத்தல்
(தலைவன் கூற்று)

 கண்ணேய் பரிவு கடிந்தது காத்தனம் பின்னதன்பின்
 மண்ணேய் மணநுகர் நாசிய தன்பின்னர் வார்திணிதோள்
 பண்ணேய் மொழிபரி வேதும் பரிந்தன்று நாவவைதாம்
 எண்ணேய் விழியி னயர்வுயிர்த் தோங்க வினியருளே.

(இ - ள்.) பண்போன்ற இனிய மொழியினையுடையோய்! எமது கண் எய்திய துன்பத்தை அகற்றி அதனைப் பாதுகாத்தேம். இனி அக் கண்ணின் பின்னர் நிலத்தின் பண்பாகிய மணத்தை நுகராநின்ற நாசியும் அதன்பின் நெடிய திணிந்த தோளும் நாவும் தம் வருத்தந் தீர்ந்தில. இவை தாம் கருதுதற்குக் காரணமான என்னுடைய விழிகளைப்போன்று துன்பகன்று செழிக்கும்படி இனி நீ அருள் புரிவாயாக!

(வி - ம்.) காட்சி யின்பத்தாலே கண்கள் நின்னுடம்பாடின்றியே பரிவகன்றன. இனி உயிர்த்தலும் உறுதலும் உண்ணலுமாகிய இன்பங்களை நீ அருளி நிரலே நாசி தோள் நா என்னு மிவற்றின் பரிவினை அகற்றுக என்றவாறு.

(588)